சனி, 31 ஆகஸ்ட், 2013

Do-It-Yourself.1KW-24V Solar Power System.Part.2

முந்தைய பதிவில் குறிப்பிட்ட மாதிரி நீங்கள் சோலார் ஆரே அமைப்பதற்கான இரும்பிலான அமைப்பை (Structure) உருவாக்கி விட்டீர்கள். இதை மேல் பக்க பிரேம் தனியாகவும், கால்கள தனியாகவும் செய்து. பிரேமுடன் கால்களை போல்ட் நட்டு போட்டு பிக்ஸ் செய்யும் வகையில் அமைப்பது நல்லது. அவ்வாறு இருந்தால் மொட்டை மாடிக்கு எடுத்து செல்ல வசதியாக இருக்கும். அங்கு அதை அசெம்பிள் செய்து கொள்ளலாம்.



தெற்கு(South facing) திசையை நோக்கி பேனல் பார்க்கும் வகையில் அதை வையுங்கள். சரியாக திசையை பார்க்க நீங்கள் திசை காட்டும் கருவியை (Compass) பயன்படுத்தலாம். இனி ஒவ்வொரு பேனலாக பிரேமில் மாட்டவேண்டும். ஒரு பேனல் சுமார் 20 கிலோ எடை உள்ளது. மேல்பக்கத்தில் கண்ணாடி பொருத்தப்பட்டுள்ளது. எனவே அதை எடுத்து மாட்டும் பொழுது கவனமாக கையாள வேண்டும். பேனலில் ஜங்ஷன் பாக்ஸ் மேல் பக்கம் இருக்கும் படி வைக்க வேண்டும். பேனலின் பின் பக்கத்திலுள்ள துளைகள், பிரேம் சட்டத்தில் உள்ள துளைகளின் மேல் இருக்கும்படி வைக்கவும். பேனலை சட்டத்தோடு இணைக்க ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் (SS Bolt&amp&Nut) அல்லது பித்தளை போல்ட் நட்டைதான் உபயோகிக்க வேண்டும். அது அதிக நீளம் உள்ளதாக இருக்க கூடாது. நீளம் அதிகமாக இருந்தால் அது பேனலை டேமேஜ் செய்துவிடும். சரியான நீளத்தில் இருக்க வேண்டும். அதைப்போலவே அதன் கனம் (Thickness) பேனல் துளையை விட குறைவாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் நான்கு போல்ட்டையும் மாட்டும் வகையில் பேனலை அலைன் செய்ய முடியும்.

இப்பொழுது நான்கு பேனல்களையும் பேரலெல் முறையில் இணைக்க வேண்டும். ஒரு பேனல் 250W. ஆகும். பேரலில் இணைத்தால்தான் அது 1000W ஆக மாறும். அதே நேரத்தில் இந்த பேனல் 24V மின் அழுத்தம் கொண்டது ஆகும். பேரலில் இணைக்கும் பொழுது அதன் மின் அழுத்தம் மாறுபடாமல் அதே 24V ஆகவே இருக்கும். இந்த பேனல் தரும் டிசி கரண்ட் 8.62 ஆம்பியர். பேரலில் இணைக்கும் பொழுது அதன் மொத்த கரண்ட் 34.48(8.62x4) ஆம்பியர் ஆக மாறிவிடும். கீழே கொடுக்கப்பட்டுள்ள விபர குறிப்பை பாருங்கள்.

நான்கு பேனகளையும் பேரலில் இணைப்பதை இப்பொழுது பார்க்கலாம். இதை மூன்று முறையில் இணைக்கலாம்.

1. MC4 Connector, T Connector போன்றவற்றை உபயோகித்து இணைக்கலாம். இந்த கனெக்டர்கள் வாட்டர் புரூஃப் ஆனது. வெளிநாடுகளில் இதைத்தான் உபயோகிக்கிறார்கள். கீழே உள்ள படத்தை பாருங்கள்.

கீழே உள்ள படம் MC4, Y கனெக்டர் ஆகியவற்றை உபயோகித்து 3 பேனல்களை இணைத்திருப்பதை காட்டுகிறது. வெளிநாடுகளில் ரெடிமேடாகவே 0.5,1,1.5 மீட்டர் என்ற அளவில் வயரின் இருமுனைகளிலும் சாதாரண MC4 கனெக்டரின் Female, Male பகுதிகள் இணைக்கப்பட்டும், இதைப்போலவே Y கனெக்டர் இணைக்கப்பட்டும் கிடைக்கிறது. இந்த படத்தில் காட்டியுள்ளபடி 4 பேனல்களையும் இணைக்கலாம்.

அடுத்து, கிழே காட்டியபடியும் இணைக்கலாம். இது குழப்பமில்லாத முறை. படத்தை பாருங்கள்

இந்த முறைப்படி பேரலல் இணைப்பு கொடுக்க தேவையானது 4ஜோடிMC4 கனெக்டர் மட்டுமே. ஒவ்வொரு பேனலிலும் பாசிடிவ் (+) முனை வயரானது Male பகுதியுடனும், நெகடிவ் (-) முனையானது Female பகுதியுடனுடனும் இணைக்க பட்டிருக்கும். எனவே சிகப்பு நிற வயரின் ஒரு முனையில் MC4-ன் Female பகுதியையும், கருப்பு வயரின் ஒரு நுனியில் MC4-ன் Male பகுதியையும் இணைத்து, தனித்தனியாக 4 பேனல்களின் அவுட்புட் கரண்டை, இன்வெர்டர் வைத்திருக்கும் அறைக்கு கொண்டு செல்லலாம். இவ்விதம் தனித்தனியாக இணைப்பை கொண்டு செல்வதால் வயரும் 10 ஆம்பியர் கரண்டை கொண்டு செல்லும் திறன் உள்ளதாக இருந்தால் போதும். வயரினுடைய Current Carrying Capacity பற்றி தெரிந்து கொள்ள இந்த பட்டியலை பாருங்கள்.


இதன்படி ஒவ்வொரு பேனல்களின் அவுட்புட்டை தனியாக எடுத்து செல்ல நமக்கு 8.62 ஆம்பியர் கரண்டை தாங்கும் வயர் எது? மேல் வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளது வயரின் சைஸ் அதாவது Cross Sectional Area of Wire. Current Rating என கீழ் வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளது வயரின் கரண்டை கடத்தும் திறன். நாம் 12 ஆம்பியர் அல்லது 15 ஆம்பியர் திறன் கொண்ட வயரை தேர்ந்தெடுக்கலாம். அதாவது 1.0 sq mm அல்லது 1.5 sq mm வயர். 1.5 sq mm வயரே நல்லது.

நான்கு பேனலையும் பேனலுக்கு பின்பக்கமே பேரலெல் இணைப்பு கொடுத்தால் அதன் மொத்த அவுட்புட் 35 ஆம்பியர் ஆகும். இதை இன்வெர்டருக்கு எடுத்து செல்ல நமக்கு தேவையான வயர் எது என்பதை பார்க்கலாம். 6sq mm என்றால் அதன் திறன் 35 ஆம்பியர். இதை உபயோகிக்க முடியாது. அதனால் 10sq mm உபயோகிக்க வேண்டும். விலையும் அதிகம். பெரிய கடைகளில் மட்டுமே கிடைக்கும். எனவே இரண்டு பேனல்களை பேரலெல் முறையிலும் மற்ற இரண்டை தனியாக பேரலெல் முறையிலும் இணைத்தால் இரண்டு சர்க்கியூட் ஆகும். அப்பொழுது 20 ஆம்பியர் திறன் உள்ள 2.5sq mm வயரை உபயோகித்தால் போதும்.

MC4கனெக்டரே இல்லாமலும் கீழே உள்ள படத்தில் காட்டியிருப்பதை போல "O" டைப் லக்ஸ் (Lugs) உபயோகித்தும் இணைக்கலாம்.

அதாவது பேனலின் ஜங்ஷன் பாக்ஸை திறந்து வெளியே வரும், MC4 கனெக்டர் இணைக்கப்பட்ட வயரை கழற்றி விட்டு அதில் இந்த லக்ஸ்-ஐ இணைத்து விடலாம்.

கருத்துகள் இல்லை: