சனி, 10 ஆகஸ்ட், 2013

வீட்டு வயரிங் - பகுதி.6

இந்த தொடர் பதிவின் 5-வ்து பகுதியில், ஒரு அறையில் எவ்வாறு கன்சீல்டு வயரிங் செய்ய வேண்டும் என்பதை விவரித்துள்ளேன். இவ்வாறு மூன்று அறைகளிலும்(உதாரணத்திற்கு, ஆரம்பத்தில் இருந்தே மூன்று அறைகள் கொண்ட வீட்டையே குறிப்பிட்டுள்ளேன்) வயரிங் செய்யப்படும். ஒவ்வொரு அறையிலிருந்தும் சப்ளை வயர்கள் தனித்தனியாக, தனித்தனி பைப் மூலம் மெயின் போர்டு வைக்க வேண்டிய இடத்திற்கு கொண்டு வரப்படும். சிலர் பைப் செலவை குறைக்க ஒரே பைப்பில் மூன்று அறைகளுக்கும் உரிய சப்ளை வயர்களை கொண்டு வருவார்கள். கீழே உள்ள படம் அதை காட்டுகிறது.


வீட்டு வயரிங் - பகுதி.6
இவ்விதம் ஒரே பைப்பில் எல்லா அறைக்கும் உரிய சப்ளை வயரை கொண்டுவருவதில் அதிக நஷ்டம் உண்டு. எல்லா அறையிலும் உள்ள் சுவிட்சு போர்டுகளுக்கும் அனைத்து வயர்களை கொண்டு வந்து, திரும்ப ரூஃப்-க்கு கொண்டு போய் அடுத்த அறைக்கு என கொண்டு செல்லப்படும் பொழுது அதிகப்படியான வயர் செலவாகும். இதற்கு ஆகும் செலவு, பைப்பை லாபப்படுத்தியதால் கிடைக்கும் லாபத்தை போல பல மடங்கு அதிகம் ஆகும். எனவே தனித்தனியாக ஒவ்வொரு ரூமுக்கும் பைப் போட்டு, அதன் வழியாக வயர் கொண்டு செல்வதுதான் சரியான முறை ஆகும்.

முதலில் மீட்டர் போர்டில் உள்ள பொருட்களைப்பற்றி பார்க்கலாம்.

வீட்டு வயரிங் - பகுதி.6
1. சிங்கிள் பேஸ் 5-10 ஆம்பியர் வாட் ஹவர்(Watt Hour) மீட்டர்.
2. சிங்கிள் பேஸ் மெட்டல் மெயின் சுவிட்சு=1
3. 16 ஆம்பியர் ஃபியூஸ் யூனிட் =3
4. 64 ஆம்பியர் ஃபியூஸ் யூனிட் =1
5. 6-வே நியூட்ரல் லிங் = 1
6. 6- வே எர்த் லிங் = 1

இவை அனைத்தும் மரத்திலான் பலகையில்(போர்டு) வயரிங் செய்வதற்கு வசதியாக பொருத்தப்பட்டிருக்கும். கீழே உள்ள படத்தை பார்க்கவும்.

இனி இவை எவ்வாறு இனைப்பு கொடுக்கப்பட்டுள்ளது என பார்க்கலாம். மின்வாரிய சப்ளை கேபிளிலிருந்து சிகப்பு மற்றும் கருப்பு நிற வயர்கள் அதன் வெளிப்புற ஸ்லீவ்-லிருந்து வெளியே எடுக்கப்பட்டுள்ளது. பொதுவாக சிகப்பு நிற வயர் லைன்(பேஸ்)-க்கும், கருப்பு நிற வயர் நியூட்ரலுக்கும் உபயோகப்ப்படுத்தப்படும்.

கேபிளின் சிகப்பு வயர் மீட்டரின் முதல் இணைப்பு பகுதியில் (Terminal) இணைக்கப்பட்டுள்ளது. கருப்பு வயர் மீட்டரின் இரண்டாவது டெர்மினலில் இணைக்கப்பட்டுள்ளது. மீட்டரின் முதல் டெர்மினலும் நான்காவது டெர்மினலும் உட்புறம் ஒரு காயிலால் இணைக்கப்பட்டிருக்கும். எனவே மீட்டரின் முதல் டெர்மினல் வழியாக இணைக்கப்படும் பேஸ் சப்ளை அந்த காயில் வழியாக நான்காவது முனைக்கு வரும். அதைப்போலவே இரண்டாவது டெர்மினல் வழியாக மீட்டருக்குள் செல்லும் நியூட்ரல் மூன்றாவது டெர்மினல் வழியாக வெளி வரும்.

இவ்விதம் நான்காவது டெர்மினல் வழியாக வெளிவரும் லைன் சப்ளை 63 ஆம்பியர் பியூஸ் கேரியர் யூனிட்டின் கீழ் பக்கமுள்ள கனெக்டரில் இணைக்கப்பட்டுள்ளது. பியூஸ் கேரியரில் பொருத்தப்பட்டுள்ள பியூஸ் வயர் வழியாக மேல் பக்கமுள்ள டெர்மினலுக்கு வரும். மேல் பக்க டெர்மினல் 32 ஆம்பியர் மெயின் சுவிட்ச்சின் கீழ் பகுதியில் உள்ள முதல் டெர்மினலுடன் இணைக்கப்பட்டுள்ளது.
இதைப்போலவே மீட்டரின் மூன்றாவது முனை மெயின் சுவிட்ச்சின் இரண்டாவது டெர்மினலுடன் இணைக்கப்பட்டுள்ளது. மெயின் சுவிச்சை ஆன் செய்தால் லைன் சப்ளை முதல் டெர்மினலில் இருந்து மெயின் சுவிட்சில் உள்ள முதல் பியூஸ் யூனிட வழியாக மேல் பக்கம் உள்ள டெர்மினலுக்கு வரும். இதைப்போலவே நியூட்ரலும் இரண்டாவது பியூஸ் யூனிட் வழியாக மேல்பக்கமுள்ள டெர்மினலுக்கு வரும். மெயின் சுவிட்ச்சில் லைன் சப்ளை இணைக்கப்பட்டுள்ள பியூஸ் யூனிட்டின் கேரியரில் மட்டுமே பியூஸ் வயர் போடப்பட்டிருக்கும். நியூட்ரல் செல்லும் கேரியரில் கம்பெனியாலேயே உட்புறமாக செப்பு தகடால் இண்டர்லிங் ( இணைப்பு) செய்யப்பட்டிருக்கும்.

மெயின் சுவிட்ச்சின் முதல் பியூஸ் யூனிட்டின் மேல் பக்க கனெக்டர் 1,2,3 என அடையாளமிடப்பட்டுள்ள செக்ஷன் பியூஸ் யூனிட்டுகளின் கீழ் பக்க டெர்மினல்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. எனவே லைன் சப்ளை, மெயின் சுவிட்சிலிருந்து மூன்று செக்ஷன் பியூஸ் கேரியர்களின் மேல்பக்க டெர்மினல்களுக்கு வரும்.

இனி நியூட்ரலை பார்க்கலாம். மெயின் சுவிட்ச்சின் இரண்டாவது பியூஸ் யூனிட்டின் மேல்பக்க டெர்மினல் நியூட்ரல் லிங்குடன் இணைக்கப்பட்டுள்ளது. நியூட்ரல் லிங் என்பது உலோகத்திலான(பித்தளை) ஒரு நீளமான சதுர வடிவ கம்பியாகும். இதில் பல வயர்களை இணக்க வசதியாக பல் துளைகளும், ஸ்குருவும் இருக்கும். இதை போலவேதான் எர்த் லிங்கும். மெயின் சுவிட்ச்சிலிருந்து வரும் நியூட்ரல் இந்த லிங்குக்கு வரும்.

எர்த என்பது குறைந்த பட்சம் ஐந்து அடி நீளம் நீளம் கொண்ட ஒரு இஞ்ச் விட்டம் கொண்ட ஜி.ஐ பைப்பு நல்ல ஈரப்பதமுள்ள இடத்தில் நான்கு அடிக்கு மண்ணில் புதைக்கப்பட்டு அதன் மேல் பக்கத்தில் உள்ள துளையில் போல்ட் நட்டு மாட்டப்பட்டிருக்கும். இதில் கனமான செப்பு கம்பி(12SWG-கேஜ்) டைட் ஆக இணைக்கப்பட்டிருக்கும். செப்பு கம்பியின் மறு முனை மெயின் போர்டில் உள்ள எர்த் லிங்குடன் இணைக்கப்பட்டிருக்கும். இது தான் எர்த்.

முந்தைய பதிவில் மூன்று அறைகளில் இருந்து, தனித்தனியாக பைப் வழியாக சப்ளை வயர்கள் கொண்டு வரப்படும் என குறிப்பிட்டுள்ளேன். முதல் பைப்பிலிருந்து வரும் சிகப்பு வயர் (பேஸ்/லைன்) முதல் பியூஸ் யூனிட்டின் மேல்பக்க கனெக்டருடன் இணைக்கப்பட்டுள்ளது. கருப்பு வயர் நியூட்ரல் லிங்குடனும், பச்சை நிற வயர் எர்த் லிங்குடனும் இணைக்கப்பட்டுள்ளது. இதைப்போலவே இரண்டாவது பைப்பின் சிகப்பு வயர் இரண்டாவது பியூஸ் யூனிட்டுடனும், மூன்றாவது பைப்பின் சிகப்பு வயர் மூன்றாவது பியூஸ் யூனிட்டுடனும், கருப்பு பச்சை வயர்கள் முறையே நியூட்ரல் லிங்க், எர்த் லிங்க் ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது.

ஆக மொத்தத்தில் மூன்று அறைகளுக்கும் பேஸ் சப்ளை தனித்தனி பியூஸ் யூனிட் வழியாகவும், நியூட்ரல் எர்த் இவைகள் நேரடியாகவும் செல்கிறது. இதனால் அறைகளில் உள்ள அனைத்து மின் சாதனங்களும் இயங்கும்.

மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்.......................

கருத்துகள் இல்லை: