சனி, 31 ஆகஸ்ட், 2013

சமையலறை கழிவில் இருந்து சமையல் எரிவாயு.1

நாம் தினமும் வெளியே தூக்கியெறியும் சமயல் கழிவுகளாகிய, அழுகிய காய், பழம், பழத்தொலி, சமைத்த உணவு பொருட்கள் போன்றவற்றிலிருந்து நமக்கு தேவையான சமையல் எரிவாயுவை தயாரிக்க முடியும். இன்னும் ஒரு சில மாதத்தில் ஆயில் கம்பெனிகள் முற்றிலுமாக எரிவாயுவிறகு வழங்கப்பட்டு வரும் மானியத்தை நிறுத்த போகின்றன. இதனால் நாம் உபயோகிக்கும் 14.2 கிலோ எடையுள்ள சிலிண்டரின் விலை சுமார் ரூபாய்.850-ஐ தொடும். அதாவது இரட்டிப்பு விலையாகி விடும்.

இந்த சூழ்நிலையில் வீட்டில் நாமே கேஸை உற்பத்தி செய்வது நல்லது என்பதால் நீங்கள் இதை புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்த பதிவு. சமையலறை கழிவிலிருந்து எரிவாயுவை உற்பத்தி செய்ய பயன்படும் சாதனத்தின் பெயர் " பயோ கேஸ் சிஸ்டம்(ANAEROBIC DIGESTER SYSTEM)" ஆகும். மேழே உள்ள படத்தை பாருங்கள்.


சிஸ்டம், ஆன் ஏரோபிக் சிஸ்டம் என கூறுவதால் இது ஏதோ பெரிய கருவி என்று நினைத்துவிடாதீர்கள். ரெம்ப சிம்பிளாக சொல்லப்போனால், முன்பெல்லாம் உடுப்பி ஹோட்டலில் காப்பியை தம்ளரில் ஊற்றி அதை வட்டகை கப் கொண்டு மூடி, அதை தலைகீழாக்கி கொண்டு வந்து டேபிளில் வைப்பார்கள். வட்டகை கப் மேல் நோக்கி இருக்கும். தம்ளர் தலைகீழாக இருக்கும். அதைப்போலவே இதில் பெரிய பிளாஸ்டிக் தொட்டியினுள் சிறிய தொட்டி ஒன்று தலைகீழாக கவிழ்த்தி வைக்கப்பட்டிருக்கும். சிறிய தொட்டியின் மேல் பக்கத்தில் நடுவில் ஒரு வால்வு பொருத்தப்பட்ட பைப் மாட்டப்பட்டிருக்கும். பெரிய தொட்டியின் பக்கவாட்டில் மேல் பக்கம் ஒரு பைப், எதிர் பக்கத்தில் கீழ் புறத்தில் புனலுடன் கூடிய நீளமான பைப் என இரு பைப்புகள் பொருத்தப்பட்டிருக்கும். அவ்வளவுதான். கீழே உளள படத்தை பாருங்கள்.


சமயலறை கழிவுகளை 3/4 அங்குல சிறு சிறு துண்டுகளாக்கி தண்ணீருடன் கலந்து "A" பைப்பினுள் ஊற்ற வேண்டும். இவ்விதம் ஊற்றப்படும் கழிவுகளிலிருந்து பாக்டீரியாக்கள் மூலம் மீதேன்(CH4) மற்றும் கார்பன்-டை ஆக்சைடு(CO2) ஆகிய வாயுக்கள் உற்பத்தியாகி உட்புறமுள்ள தொட்டியின் மேல்பகுதியில் தங்கும். இந்த தொட்டி "கேஸ் ஹோல்டர்" என சொல்லப்படும். இவ்விதம் கழிவிலிருந்து எரி வாயு உற்பத்தியாக 48 மணி நேரம் ஆகும். தினந்தோறும் தண்ணீருடன் சேர்த்து கழிவை இதனுள் போடுவதால் தொடர்ச்சியாக எரிவாயு உற்பத்தியாகிக்கொண்டே இருக்கும். மக்கிப்போன கழிவு கூழின் மேல்மட்டத்தில் எரிவாயு தொடர்ந்து சென்று தங்குவதால் அங்கு அழுத்தம் ஏற்படும். இந்த அழுத்தம், உட்புற தொட்டியை மேல்புறமாக தூக்கும் அளவிற்கு உயரும் பொழுது, தொட்டி மேல் நோக்கி உயரும். இவ்விதம் தொட்டி உயரும் பொழுது எரிவாயு தங்க இடம் கிடைக்கும்.

கேஸ் அடுப்பு எரிய தேவையான அளவுக்கு எரிவாயு அழுத்ததுடன் கிடைக்க இந்த தொட்டியின் மீது கல்லை வைக்கலாம். இந்த தொட்டியின் மேல் பக்கத்திலுள்ள வால்வுடன் (C) தேவையான அளவிற்கு வளையும் தன்மை கொண்ட கேஸ் டியூப்பை இணைக்க வேண்டும். அதன் மறு நுனியை அடுப்புடன் இணைக்க வேண்டும். இனி தொட்டியின் மீதுள்ள வால்வை திறந்தால், எரி வாயு டியூப் வழியாக அடுப்புக்கு செல்லும். கேஸ் அடுப்பை உபயோகப்படுத்துவது போல இனி உபயோகிக்கலாம்.

தொட்டியினுள் இருக்கும் கூழான கழிவின் அளவு வெளிப்புறத்திலுள்ள தொட்டியில் பொருத்தப்பட்டுள்ள அவுட் லெட் பைப்பின்(B) மட்டத்தை அடைந்தவுடன், உபரி பால்/கூழ்(SLURRY) அந்த குழாய் வழியாக வெளியே வர ஆரம்பிக்கும். இதில் உரச்சத்து இருப்ப்பதால் இதை செடி, மரங்களுக்கு ஊற்றலாம்.

நமக்கு மூன்று விதத்தில் இதனால் லாபம்.

1. குப்பையை போட இடந்தேடி அலைய வேண்டாம்.
2. வீட்டு சமையலுக்கு தேவையான எரிவாயு பைசா செலவில்லாமல் கிடைக்கிறது. சிலிண்டர் வெடித்து விடுமோ என்ற பயம் இல்லை.
3. வீட்டிலுள்ள செடி, மரம் இவற்றிற்கு இலவசமாக உரம் கிடைக்கிறது.

எவ்வளவு எரிவாயு கிடைக்கும், இந்த சிஸ்டத்தை அமைக்க எவ்வளவு இடம் வேண்டும் என்பதை அடுத்த பதிவில் பார்க்கலாம்.

கருத்துகள் இல்லை: