மின்சாதனம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மின்சாதனம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 6 ஜனவரி, 2013

டிப்ஸ்:உங்கள் வீட்டு ஃப்ரிட்ஜும், ஏ.ஸி.யும் மின்சாரத்தை அதிகம் இழுக்கிறதா?

உங்களுக்கொரு விஷயம் தெரியுமா? நார்மல் ஃபிரிட்ஜின் ஆயுட் காலம் 15 லிருந்து 20 வருடங்கள்தான்! அதற்குப் பின் அதை இயக்க செலவிடும் தொகை ஃப்ரிட்ஜை வாங்கும்போது தந்த பணத்தை விட பல மடங்கு அதிகமாக இருக்கும். அதனால் சும்மா கிடைக்கிறதே என்றுகூட பழைய ஃப்ரிட்ஜை வாங்கி விடாதீர்கள். அதேபோல் அளவில் சிறிய ஃபிரிட்ஜிக்குத் தேவையான கரண்ட், அளவில் பெரிய ஃபிரிட்ஜிக்குத் தேவையான கரண்ட்டை விட குறைவுதான். எனவே உங்கள் குடும்பத்தின் தேவைக்கு ஏற்ற அளவில் ஃபிரிட்ஜை தேர்ந்தெடுத்தால் கரண்ட்டை மிச்சப்படுத்தலாம்.

வியாழன், 27 செப்டம்பர், 2012

மிக்ஸி


 
ஆங்கிலத்தில் ‘மிக்ஸ்’ என்றால் கலப்பது என்று பொருள். ஆனால் இந்த மிக்ஸி என்னும் கருவி அதற்குமேல் பல காரியங்களைச் செய்கிறது. மின்சாரம் முழுமையான பயன்பாட்டுக்கு வந்தபின் உருவாக்கப்பட்ட பல வீட்டு உபயோகக் கருவிகளில் இந்த மிக்ஸியை முக்கியமானது என்று சொல்லலாம்.



இதுபோன்ற கலக்கும் கருவி ஆரம்பத்தில், முட்டையை உடைத்து அதன் கருவை நன்கு அடித்துக் கலக்க என்று உருவாக்கப்பட்டது. அங்கிருந்து வளர்ச்சி பெற்று, பழங்களை அரைத்து ஜூஸ் உருவாக்கக்கூடியதாக மாற்றம் பெற்றது. பின் தயிர் கடைய, மாவு அரைக்க, உலர் தானியங்கள், பருப்புகள் ஆகியவற்றை அரைக்க என்று பரிமாண வளர்ச்சி அடைந்துள்ளது.

அடிப்படையில் இந்தக் கருவியில் இருப்பது இரண்டு முக்கியமான பாகங்கள்: ஒரு மின்சார மோட்டார், பிளேடு (Blade) எனப்படும் பல்சக்கரம்.

மின்சார மோட்டார் என்ற கருவிக்குள் மின்சாரம் செல்லும்போது அதில் உள்ள ரோட்டார் எனப்படும் உருளை வேகமாகச் சுழல ஆரம்பிக்கும். செலுத்தப்படும் மின்சாரத்தைக் கட்டுப்படுத்துவதன்மூலம் இந்த ரோட்டாரின் வேகத்தைக் கூட்டலாம், குறைக்கலாம். சுழலும் இந்த உருளையுடன் பல் சக்கரத்தை இணைத்தால் மிக்ஸி, ஜ்யூசர், ஃபுட் பிராசஸர் என்று பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும் கருவி தயார்.

அடுத்தது இந்தப் பல் சக்கரம். உங்கள் வீட்டு மிக்ஸி ஜாடிகளை எல்லாம் எடுத்து அதில் உள்ள பல் சக்கரங்களைப் பாருங்கள். அவற்றில் ஒருவித சிம்மெட்ரி (சீரொருமை) இருக்கும். இரண்டு பற்கள் இருந்தால் அவை எதிரெதிராக 180 டிகிரி தள்ளி இருக்கும். மூன்று பற்கள் இருந்தால் 120 டிகிரி தள்ளி ஒவ்வொன்று என்று இருக்கும். பற்கள் எப்படி நீட்டிக்கொண்டிருக்கின்றன, அவற்றின் ஓரம் எப்படி கூர்மையாக அல்லது ரம்பத்தின் முனைபோல உள்ளது என்பதைப் பார்வையிடுங்கள்.

இந்தப் பல் சக்கரம்தான் பொருள்களை வெட்டுகிறது; அரைக்கிறது; கரைக்கிறது. இந்தச் சக்கரம் ஒரு ஜாடிக்குள் இருக்கும். அந்த ஜாடிக்குள் பொருள்களைப் போட்டு மூடியபிறகே, மோட்டாரை இயக்குவோம். மோட்டார் இயங்கும்போது பல்சக்கரம் அதிவேகத்தில் சுழலுகிறது.

பல்சக்கரத்தில் மாட்டிய பொருள்கள் - திடமாக இருந்தாலும் சரி, திரவமாக இருந்தாலும் சரி - தூக்கி அடிக்கப்படுகின்றன. இந்தக் கட்டத்தில் ஒரு முக்கியமான இயல்பியல் அடிப்படையை நாம் தெரிந்துகொள்ளவேண்டும். கனம் குறைந்த பொருள்கள் மையப்பகுதியிலேயே சுற்றிக்கொண்டிருக்கும். ஆனால், கனம் அதிகமான பொருள்கள் வெளிப்புறத்தை நோக்கிச் செல்லும். இது ‘மைய விலகு விசை’ காரணமாக நடக்கிறது.

பருப்பை அரைத்துப் பொடியாக்கும் எண்ணத்துடன் வறுத்த துவரம் பருப்பை மிக்ஸியில் போடுங்கள். கனமான முழுப் பருப்பும் படு வேகத்தில் பல்சக்கரத்தில் அடிபட்டு சுவற்றில் மோதி மீண்டும் உள்ளே திருப்பி அடிக்கப்பட்டு, மீண்டும் பல் சக்கரத்தில் மோதும். இப்படி நடக்கும்போது அது தெறித்து உடையும். அப்படி உடைவதில் பெரிய துகள்கள் மீண்டும் மீண்டும் வேகமாகச் சுவற்றில் மோதி உள்ளே வந்து உடைபடும். சிறிய துகள்கள் மையப்பகுதியிலேயே இருக்கும்.

மிக்ஸியால் என்ன சாதிக்கமுடியும் என்பது அதன் பல்சக்கரங்களின் வடிவமைப்பு சார்ந்தது. தக்காளி ஜூஸ் போட மிக எளிதான இரண்டு பல்களைக் கொண்ட சக்கரம் போதும். ஆனால் தோசைக்கு மாவரைக்க இந்தப் பல் சக்கரம் போதாது. சொல்லப்போனால், மிக்ஸியில் தோசை அரைப்பதைவிட கிரைண்டர் எனப்படும் கல் உரலில் அரைப்பதுதான் சரி.

அம்மா (அல்லது அப்பா!) சமையலறையில் வேலை செய்யும்போது எட்டிப் பாருங்கள். மிளகு, துவரம் பருப்பு, மிளகாய் ஆகியவற்றை வறுத்து, அதனை ஒருவிதமான ஜாடியில் போட்டு மிக்ஸியில் அரைத்தெடுத்து அந்தப் பொடியை ரசத்தில் சேர்ப்பார். மறுபக்கம் இஞ்சி, பூண்டு, வதக்கிய வெங்காயம், தக்காளி ஆகியவற்றை நீர் சேர்த்து இன்னொரு ஜாடியில் அரைத்து சப்பாத்திக்குத் தொட்டுக்கொள்ள ஒரு சைட் டிஷ் செய்வார். உலர்ந்த பொருள்களை பொடியாக அரைக்க ஒருவிதமான பல் சக்கரம் தேவை. ஈரமான பொருள்களை விழுதாக, துவையல்போல அரைக்க சற்றே வேறு விதமான பல் சக்கரம் தேவை.

பொதுவாக அமெரிக்காவில் விற்கப்படும் மிக்ஸி அல்லது ஃபுட் பிராசஸரைக் கொண்டு இந்தியச் சமையலுக்குத் தேவையான அரைத்தல்களைச் செய்வது எளிதல்ல. இந்தியாவில் இந்தியச் சமையலுக்கென பிரத்யேகமாக மிக்ஸிகள் தயாரிக்கப்படுகின்றன. இவற்றில் வலு அதிகமான மோட்டார் இருக்கும். பலவித வேகங்களில் சுழலும் மோட்டார் இது. பல்சக்கரங்களும் அதற்கெனப் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டிருக்கும்.

மிக்ஸி புழக்கத்துக்கு வருவதற்குமுன்னர், இந்திய அம்மாக்களும் பாட்டிகளும் அம்மியைப் பயன்படுத்தினர். இன்று அம்மி, கல்லுரல், உரல்-உலக்கை ஆகிய சாதனங்கள் காணாமல் போய்விட்டன. அவற்றுக்கு பதிலாக மிக்ஸி, கிரைண்டர் போன்ற மின் இயந்திரங்கள் வந்துவிட்டன. இதனால் சமையல் அறையில் வேலை நிச்சயம் எளிதாக ஆகியுள்ளது.

புதன், 12 செப்டம்பர், 2012

"ஏ.சி. வாங்க செல்கிறிர்களா' இதை படித்து விட்டு செல்லவும் ?

இந்த கொளுத்தும் வெய்யிலை சமாளிக்க ஏ.சி.யை வாங்க தீர்மானித்து விட்டீர்களா? எதை வாங்குவது என்று நீங்கள் குழம்பினால் அது நியாயம் தான்!

இப்போது எங்கு பார்த்தாலும் விதவிதமான ஏ.சி.கள் விற்பனைக்கு உள்ளன. நீங்கள் விரும்பும் அளவுக்கு அறையை குளிற வைக்கும் ஏ.சி., காற்றை சுத்தமாக்கும் ஏ.சி. என்று எத்தனையோ....

நீங்கள் வாங்கும் ஏ.சி. புதிது, உபயோகித்தது, பிராண்டட், அசம்பிள்டு என்று எதுவாக இருந்தாலும் சில குறிப்புகளை நினைவில் வைப்பது நல்லது.

ஜன்னலில் பொருத்தக் கூடியவை:

ஜன்னலின் கீழ் பாகத்தில் இது எளிதாக பொருந்திவிடும். இதற்காக சுவரை உடைக்க வேண்டிய அவசியமில்லை.

இதை எளிதாக கழற்றவும், மாட்டவும் முடியும். அதனால் வாடகைக்கு ஏ.சி. வாங்கினாலும், வாடகை வீட்டில் பொருத்த வாங்கினாலும், இதுவே சிறந்தது.

சுவரில் பொருத்தக் கூடியது:

இவை பார்ப்பதற்கு அழகானவை. ஆனால் விலை கொஞ்சம் கூடுதல்.

ஜன்னலை ஏ.சி.யால் அடைக்க விரும்பாதவர்கள் இதை தேர்ந்தெடுக்கலாம். வேண்டிய இடத்தில் பொருத்தலாம்.

வீட்டுக்கு சொந்தக்காரர்கள் சுவரில் துளை போட அனுமதிப்பார்களா என்பதை வாடகை வீட்டில் இருப்பவர்கள் யோசிக்க வேண்டும்.

ஜன்னலில்/சுவரில் பொருத்தக் கூடியது:

வாடகை வீட்டில் இருக்கும்போது, ஜன்னலில் பொருத்திக் கொள்ளலாம். சொந்த வீட்டுக்கு மாறியவுடன் சுவரில் பொருத்தலாம்.

ஜன்னலிலும், சுவரிலும், பொருந்தக் கூடியது என்பதால் இது பலரால் விரும்பப்படுகிறது. ஆனால் இதன் விலையும் அதிகம்.

கவனிக்க வேண்டிய அம்சங்கள்:

தேவையான அளவு அறை குளிர்ந்த பிறகு பொதுவாக கம்ப்ரெஸ்ஸர் வேலை செய்வதை நிறுத்திவிடும். ஆனால் ஏ.சி.க்கு உள்ளே இருக்கும் விசிறி வேலை செய்வதால் மின் கட்டணம் ஏறிக்கொண்டே போகும். கம்ப்ரெஸ்ஸர் நிற்கும் போது விசிறியும் நிற்பது போன்ற வசதி உள்ளதா என்று கவனிக்கவும்.

ஆஸிலேடிக் வெண்ட்ஸ் இருந்தால் வெளியே வரும் குளிர்ந்த காற்று அறை முழுக்க சீராக பரவும்.

ரிமோட் கன்ட்ரோல் வசதி இருந்தால் உட்கார்ந்தபடியே ஏ.சி.யை இயக்கலாம்.

டைமர் இருந்தால் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஏ.சி.யை இயக்கவும் நிறுத்தவும் முடியும்.

ஒன்று அல்லது இரண்டு வருடம் நிறுவனத்தின் உத்தரவாதம் உள்ளதா என்பதை கவனிக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் வேறு ஒரு ஏ.சி.யை வாங்குவதே நல்லது.

புதன், 5 செப்டம்பர், 2012

கியாரண்ட்டி’ என்றால் ‘உத்திரவாதம்’ என்பது வாரண்டி என்றால்?

கியாரண்ட்டி’ என்றால் ‘உத்திரவாதம்’ என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. ‘வாரண்ட்டி’ என்பதும் கிட்டத்தட்ட அதே பொருளைக் குறிக்கும் சொல்தான். ஆனால் சட்டத்தின் பார்வையில் ‘கியாரண்டி’ என்றால் ‘பொருளை மாற்றிக் கொடுப்பது,’ வாரண்டி என்றால் ‘சர்வீஸை’க் குறிப்பது. அதாவது, ஒரு பொருள் வாங்கிய பின்னர் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் அது சரியாக வேலை செய்யாவிட்டால், மாற்றிக் கொடுப்பார்கள். ஆனால் தற்போது, பொருளை மாற்றிக் கொடுப்பதில்லை. ரிப்பேர்தான் செய்து கொடுக்கிறார்கள்.

சமீபத்தில் ‘லாப்_டாப்’ தொடர்பான ஒரு வழக்கு நடந்தது. ஒரு ‘சயன்டிஸ்ட்’ தன்னுடைய புதிய கண்டுபிடிப்பை, ஒரு செமினாரில், ‘லாப்டாப்’ மூலமாக விளக்கிக் கொண்டிருக்கும்போது, மானிட்டர் வெறுமையாகிவிட்டது. மேற்கொண்டு எப்படி தொடர்வது என்று தெரியாமல், தவித்து, எப்படியோ சமாளித்திருக்கிறார். உடனே, ‘லாப்_டாப் வாங்கிய நிறுவனத்தைக் கேட்டதில்’ அவர்கள் கூலாக, ‘நீங்கள் ‘லாப்_டாப்பை’ சரியாக ‘பிளக்கில்’ செருகவில்லை. அதனால் அது எங்கள் தவறு இல்லை. இதற்கு நாங்கள் ஒன்றும் செய்யமுடியாது’ என்று தட்டிக்கழித்துவிட்டார்கள். மேலும் வற்புறுத்தி, ‘கியாரண்ட்டி’ கொடுத்திருப்பதால், மாற்றிக் கொடுக்க வேண்டும் என்றவுடன், நாங்கள் கியாரண்ட்டி கொடுக்கவில்லை. வாரண்ட்டி என்றுதான் ‘கார்டு’ கொடுத்திருக்கிறோம். அதனால் மாற்றிக் கொடுக்க முடியாது. வேண்டுமானால் ரிப்பேர் செய்து கொடுக்கிறோம்’ என்றார்கள் ஆனால் ரிப்பேர் செய்ய முடியாமல், ‘லாப்_டாப்’ உபயோகமில்லாமல் போய்விட்டது. ‘கியாரண்ட்டி_வாரண்ட்டியை’ வைத்துக் கொண்டு எப்படி விளையாடிவிட்டார்கள் பாருங்கள்!

பொருட்களை விற்பனை செய்யும்போது, உபயோகிக்கும் முறையை விளக்க ‘இன்ஸ்ட்ரக்ஷன் மேனுவல்’ கொடுக்கிறார்கள். ஆனால் அதிலிருந்து நம்மால் எதுவும் புரிந்து கொள்ள முடிவதில்லை.

மேலே சொன்ன ‘லாப்_டாப்’ விஷயம் போல் ‘மைக்ரோவேவ் அவன்’ பற்றிய ஒரு செய்தி. பெரும்பாலான ‘மைக்ரோ வேவ் அவன்’கள், 15 ஆம்பியர், கரண்டைத் தாங்கும் சுவிட்சுகளில்தான் வேலைசெய்யும். பல வீடுகளில் இந்த வசதி இருக்காது. இதனால், சிலர், ‘அவன் வேலை செய்யவில்லையென்று’ பதட்டப்படுவார்கள். வேறு சிலர், ஆர்வக் கோளாறு காரணமாக இயங்கவைக்க வேண்டுமென்று ஏதாவது செய்து, ‘மைக்ரோ_வேவ் அவனை’ ரிப்பேர் செய்துவிடுவார்கள். அப்படி ரிப்பேரானால், இந்த ‘கியாரண்ட்டி_வாரண்ட்டி’ வார்த்தைகளைப் போட்டு நம்மைக் குழப்பி, ஏமாற்றிவிடுவார்கள். ‘15 ஆம்ஸ் சுவிட்ச்’ இல்லாதவர்கள், ஒரு ‘சுவிட்ச் கன்வெர்டர்’ வாங்கி பிளக்கில் செருகினால், ‘அவன்’ வேலை செய்யும். இதை அவர்கள் எப்படி உபயோகிக்க வேண்டும் என்பதைத் தெளிவாகப் போடுவதில்லை.

நுகர்வோர் பாதிப்படையும்போது பாதிப்பு ஏற்படுத்தியது, அரசாங்கமாக இருந்தாலும்கூட நஷ்டஈடு கொடுக்க வேண்டும். ஒரு முறை, ‘டிமாண்ட் டிராஃப்ட்’ சாதாரண தபாலில் ஒருவருக்கு அனுப்பப்பட்டது. பெறுநர், அனுப்புனர் முகவரிகள் மிகச் சரியாக இருந்தும். அனுப்பியவருக்கே திரும்பி வந்துவிட்டது. போஸ்டல் டிபார்ட்மெண்டில் அனுப்புவரின் முகவரியை, பெறுபவரின் முகவரியைவிட பெரிதாக எழுதி இருந்ததால் இந்தத் தவறு நடந்ததாக, நுகர்வோர் நீதிமன்றத்தில், பதில் மனு தாக்கல் செய்தார்கள். ஆனால் இந்தப் பதிலை ஏற்றுக் கொள்ளாத நீதிமன்றம், பாதிக்கப்பட்டவர்க்கு நஷ்ட ஈடு கொடுக்க உத்தரவிட்டது. ‘நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே!’

யார் நுகர்வோர்?

தனி ஒருவர் பொருள் வாங்கினால், நுகர்வோராகக் கருதப்பட்டு, அவருக்கான உரிமைகளை, நுகர்வோர் நீதிமன்றத்திற்குக் கொண்டு சென்று தீர்வுபெற முடியும். ஆனால் வாங்கும் பொருள் வியாபார நோக்கத்திற்காகப் பயன்படுத்தப்பட்டால், நுகர்வோர் நீதி மன்றத்தில் தீர்வு பெற முடியாது.