சனி, 31 ஆகஸ்ட், 2013

சமையலறை கழிவில் இருந்து சமையல் எரிவாயு.3

இந்த தொடரின் பகுதி 2-ல் குறிப்பிட்டபடி ARTI எனப்படும் Appropriate Rural Technology Institute-க்கு நான் அனுப்பிய மெயிலுக்கு பதில் அனுப்பி இருக்கிறார்கள். கீழே அவர்கள் தந்துள்ள கட்டண விபரங்கள் உள்ளன.


நான் விபரம் கேட்டிருந்தது, ரூ.2,500-க்கு இவர்கள் அனுப்பக்கூடிய கிட்(KIT)-ல் என்னென்ன பொருட்கள் இருக்கும் என்பதை பற்றிதான். அதைப்பற்றி எதுவுமே பதிலில் இல்லை.


இவர்களையே, நிர்மானம் செய்ய சொன்னால் தொட்டி, பைப் போன்ற பொருட்களை நம் ஊரிலேயே வாங்குவார்களாம். அவற்றின் விலையுடன் பயோ கேஸ் அடுப்பு, வால்வு அடங்கிய(என்னுடைய யூகம்) கிட்-க்கு ரூ.2500, ARTI Institutional Overhead Rs.1000, Technology Transfer charge Rs.1000, கூலி ரூ.6000, போக்குவரத்து செலவு இவற்றையெல்லாம் கொடுக்க வேண்டுமாம். இது வேலைக்கு ஆகாது. ARTI Institutional Overhead, Technology Transfer charge,கூலி இவற்றை எல்லாம் கணக்கிட்டு கம்பெனிகள் விலையை நிர்ணயம் செய்கிறது. இந்த என்.ஜி.ஓ-க்கும் கம்பெனிகளுக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லை!

எனவே சென்னையில் இருக்கும் சிண்டெக்ஸ் வினியோகஸ்தரை தொடர்பு கொண்டு கேட்ட பொழுது 1000 லிட்டர் டைஜெஸ்டருக்கு ரூ.24,000, 750 லிட் டைஜெஸ்டருக்கு ரூ.19,000 எனவும் விலை கூறினார்கள். சிண்டெக்ஸ் டைஜெஸ்டரின் படம் கீழே.

இந்த பதிவில் பயோ கேஸ் சிஸ்டம்(Anaerobic Digester) உள்ளூரில் கிடைக்கும் பொருட்களை உபயோகித்து தயார் செய்வதற்கு தேவையான பொருட்களை முதலில் பார்க்கலாம்.

முதலில் நாம் எவ்வளவு கொள்ளளவு கொண்ட சிஸ்டத்தை அமைக்க போகிறோம் என்பதை முடிவு செய்ய வேண்டும். நான்கு நபர்களுக்கு அதிகமாக அங்கத்தினர்கள் இருக்கும் குடும்பத்திற்கு 1.5 கியூபிக் மீட்டர்(1500 லிட்டர்), நான்கு நபர்கள் வரையுள்ள குடும்பத்திற்கு 1.0 கியூபிக் மீட்டர்(1000 லிட்டர்) கொள்ளளவு கொண்ட சிஸ்டம் தேவை.

1500 லிட்டர் சிஸ்டம் என்றால் 1500 லிட்டர் தொட்டியும், 1000 லிட்டர் தொட்டியும் தேவை. 1000 லிட்டர் சிஸ்டம் என்றால் 1000 லிட்டர் தொட்டியும் 750 லிட்டர் தொட்டியும் தேவை. கீழே சிண்டெக்ஸ் தொட்டியின் அளவுகள் கொடுக்கப்பட்டுள்ளது.


பெரிய தொட்டிக்குள் சிறிய தொட்டியை தலைகீழாக கவிழ்த்த வேண்டும். பெரிய தொட்டிக்குள் (டைஜெஸ்டர் தொட்டி) தண்ணீருடன் சேர்த்து போடப்படும் சமையலறை கழிவிலிருந்து உருவாகும் கேஸ்-ஐ, கேஸ் ஹோலடர் எனப்படும் தலைகீழாக கவிழ்க்கப்பட்ட சிறிய தொட்டியினுள் சேமிக்க வேண்டும். இதுதான் இந்த சிஸ்டத்தின் அடிப்படை தொழில் நுட்பம்.

1500 லிட்டர் தொட்டிக்குள் 1000 லிட்டர் தொட்டியை வைக்க முடியும். காரணம் அதன் விட்டம் 110 செ.மீ. 1500 லிட்டர் தொட்டியின் விட்டம் 135 செ.மீ. இதைப்போலவே 1000 லிட்டர் தொட்டியின் விட்டம் 110 செ.மீ என்பதால் 103 செ.மீ விட்டம் கொண்ட 750 லிட்டர் தொட்டியை அதனுள் வைக்க முடியும்.

Do It Yourself என்ற முறையில் 1500 லிட்டர் கொள்ளளவு கொண்ட டைஜெஸ்டர் சிஸ்டத்தை நாமே செய்வது பற்றி கீழே படங்களுடன் விரிவாக பார்க்கலாம். கீழே படத்தில் காட்டியபடி இரண்டு பிளாஸ்டிக் தொட்டியை தயார் செய்ய வேண்டும்.


1500 லிட்டர் தொட்டியின் மேல் பக்கம் நடுவில் 115 செ.மீ அளவிற்கு வட்ட வடிவமாக ஹேக்சா (HACKSAW) பிளேடு மூலம் வெட்டி எடுத்து விடவேண்டும்.

இப்பொழுது தொட்டியின் மேல் பக்கம் 115 செ.மீ அளவுக்கு திறப்பு இருப்பதால் இதனுள் 110 செ.மீ விட்டம் உள்ள 1000 லிட்டர் தொட்டி தாராளமாக செல்லும். படத்தை பாருங்கள்


இனி பெரிய(டைஜெஸ்டர்)தொட்டியில் இணைக்க வேண்டிய இன்லெட் மற்றும் அவுட்லெட் பைப்புகளுக்கு தேவையான பிளம்பிங் பொருட்களை பார்க்கலாம். அவற்றின் படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


நாம் அவுட் லெட்டுக்கு 2 1/2 இஞ்ச்(63 எம்.எம்) பைப்பு உபயோகித்தால், அதற்கான எல்போ, மேல் திரெட்டட் கப்ளர், பிமேல் திரெட்டட் கப்ளர் அல்லது நட்டு இவை எல்லாமே 2 1/2 இஞ்ச் ஆக இருக்க வேண்டும். அதைப்போல இன்லெட்-க்கு 3 இஞ்ச் பைப்பு உபயோகித்தால் அதற்கு தேவைப்படும் சாதனங்கள் எல்லாமே 3 இஞ்ச் ஆக இருக்க வேண்டும். இது பற்றி பின் விரிவாக பார்க்கலாம்.

இனி இந்த தொட்டியின்(பெரிய தொட்டி) மேல்பக்கம் கீழே உள்ள படத்தில் காட்டிய்படி 2.5"(63mm) அளவுள்ள MTA -ன் மரை உள்ள பக்கம், இறுக்கமாக உள்ளே செல்லும் வகையில் துளை போட வேண்டும்.


இதற்கு MTA -ன் மரை(thread) பகுதியின் கனம் கொண்ட இரும்பு பைப் ஒன்றை எடுத்து நன்றாக தீயில் பழுக்க சூடு செய்து, அதை துளை போடவேண்டிய இடத்தில் அசைக்காமல் வைத்து அழுத்தினால் பைப் உள்ளே செல்லும். பைப்பை வெளியே எடுத்துவிட்டால் துளை ஆகிவிடும். பைப்பை தொட்டியில் வைத்து அழுத்தி உள்ளே நுளைத்து பின் வெளியே எடுக்கும் வரை, பைப்பை பக்க வாட்டில் அசைக்க கூடாது. அவ்விதம் செய்தால் ஒட்டை பெரியதாகிவிடும். அருகே உள்ள படங்களை பாருங்கள்.

துளையை உண்டாக்க தேவையான இரும்பு பைப்-ஐ அடுப்பில் பழுக்க சூடாக்க வேண்டும். கீழே உள்ள படத்தில் காட்டியபடி சூடாக்கப்பட்ட பைப்பை இடுக்கியால் (Grip Pliers) பிடித்து தொட்டியின் மீது வைத்து அழுத்தினால் ஒட்டை விழும்.

.
அல்லது "Hole Saw Cutter" எனப்படும் துளைபோடும் கருவியை டிரில் மிஷினில் மாட்டி தேவைப்படும் அளவுக்கு துல்லியமாக துளை போடலாம். இந்த கருவி பிளைவுட் வேலை செய்யும் எல்லா கார்பெண்டர்களிடமும் இருக்கும்.  கீழே உள்ள படங்களை பாருங்கள்.

இனி இதைப்போலவே இப்பொழுது போட்ட துளைக்கு எதிர்பக்கத்தில் கீழ்பக்கமாக கழிவுகளை போடும் பைப்-ஐ மாட்டுவதற்கான துளை போடவேண்டும். எந்த இடத்தில் துளை வர வேண்டும் என்பதை  கீழே  உள்ள படத்தை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

இனி 1000 லிட்டர் அளவுள்ள தொட்டியில், அதன் மேல் பக்கம், அதாவது மூடி இருக்கும் பக்கம், கீழே உள்ள படத்தில் காட்டியபடி ஹேக்சா பிளேடினால் நான்கு பகுதிகளையும் வெட்டி எடுத்து விடவும். அதைப்போலவே மூடியையும் கழற்றி விடவும்.


கேஸ் ஹோல்டர் எனப்படும் இந்த தொட்டியை டைஜெஸ்டர் எனப்படும் பெரிய தொட்டிக்குள் தலைகீழாக கவிழ்த்தி வைக்கும் போது, வெட்டப்பட்ட பகுதி மற்றும் மூடியை கழ்ற்றியதால் ஏற்பட்ட திறப்பு இவற்றின் வழியாக, டைஜெஸ்டர் தொட்டிக்குள் நாம் ஊற்றும் சமையலறை கழிவும் தண்ணீரும் சென்று இரண்டு தொட்டிகளிலும் சமமாக நிரம்பும்.

கருத்துகள் இல்லை: