சனி, 31 ஆகஸ்ட், 2013

சமையலறை கழிவில் இருந்து சமையல் எரிவாயு.2

ஒரு கிலோ எடையுள்ள ஈரப்பதம் இல்லாத மாவு சத்து (Starch) சர்க்கரை சத்து(Sugar), புரத சத்து(Protein) உடைய உணவுப்பொருட்களில் இருந்து ஒரு கிலோ பயோ கேஸ்-ஐ உற்பத்தி செய்யலாம். நம் சமையல் அறை கழிவுகள் 50% மேல் ஈரப்பதம் கொண்டவை.

ஒரு கிலோ பயோ கேஸ்-ல் 750 கிராம் கார்பன் -டை-ஆக்சைடு(CO2) + 250 கிராம் மீதேன்(CH4) வாயு இருக்கும். இந்த மீதேன் வாயு தான் எரிவாயு ஆகும். இது சமையல் வாயுவாகிய LPG-க்கு நிகரானது.


அதாவது 2 கிலோ சமையல் கழிவில் இருந்து 250 கிராம் சமையல் எரிவாயு கிடைக்கும். பல ஆய்வுகள் 250 கிராமிலிருந்து 500 கிராம் வரை மீதேன் கிடைப்பதாக கூறுகிறது. இந்த அளவு, சிஸ்டத்தினுள் போடும் கழிவுகளிலுள்ள ஆர்கானிக் பொருட்களை பொருத்து மாறுபடும்.

சராசரியாக தென் இந்திய உண்வு பழக்கப்படி ஒரு நபருக்கு நாள் ஒன்றுக்கு 500 கிராம் கழிவு கிடைக்கும். ஒரு குடும்பம் என்றால் குறைந்த பட்சம் நான்கு பேராவது இருப்பார்கள். இரண்டு கிலோ கழிவு கிடைக்கும். கழிவுக்கா இந்தியாவில் பஞ்சம்?

கௌரவம் பாக்காமல் பக்கத்து வீடுகளில் சமையல் கழிவை கேட்டு வாங்கலாம். ஒரு கேரி பேக்கை கொடுத்தால் அதை போட்டு வைப்பார்கள். அதை வாங்கி உபயோகிக்கலாம். இதில் கழிவு காகிதம், செடியின் இலைகள் போன்றவற்றையும் உபயோகிக்கலாம். இந்த சிஸ்டம் உயிருள்ள ஒன்று. அதாவது பாக்டீரியாக்கள் உற்பத்தியாகி, கழிவுப்பொருட்களை மக்க வைக்கிறது. அப்பொழுது எரிவாயு உற்பத்தியாகிறது. எனவே பாக்டீரியாவை அழிக்கும் டெட்டால், ஆசிட், பிளீச்சிங் பவுடர் எதுவும் இந்த கழிவில் சேரக்கூடாது. பாக்டீரியா நன்கு வளர சீதோஷ்ண நிலை மிகவும் முக்கியம். எனவே இந்த சிஸ்டத்தை வீட்டின் வெளிப்புறத்தில் நன்கு வெயில் படும்படி வைக்கவேண்டும். வெளிப்பக்கம் வீட்டில் இடம் இல்லை என்றால் மொட்டை மாடியில் வெயில் படும்படி வைக்கலாம்.

பாக்டீரியாக்களால் மக்க வைக்க முடியாத பொருட்களாகிய உலோகங்கள், பிளாஸ்டிக், எலும்பு துண்டுகள் போன்றவற்றை இதில் போடக்கூடாது.

முக்கியமான விஷயம் என்னவென்றால், இரண்டு கிலோ கழிவிலிருந்து ஒரு கிலோ பயோ கேஸ் கிடைக்குமல்லவா? அதைக்கொண்டு இரண்டு யூனிட் மின்சாரத்தை(250 gram Methane = 2 Unit Electricity) உற்பத்தி செய்யமுடியும். அதற்கு கேஸ்-ல் இயங்கும் ஜெனரேட்டர் வேண்டும். செலவு அதிகமாகும். இதை தொழில் ரீதியாக செய்தால்தான் லாபம்.

நம் நாட்டில் பல சமூக நல அமைப்புகள்(NGO) பயோ கேஸ் சிஸ்டத்தை தயாரித்து நியாயமான கட்டணத்தில், அதை வீடுகளில் நிமானித்தும் கொடுக்கிறது. பிரச்சனை என்னவென்றால் பூனே-ல் இருக்கும் என்.ஜி.ஓ தமிழ் நாட்டிற்கு பயோ கேஸ் யூனிட்டை கொண்டுவந்து நிர்மானித்து கொடுக்க இயலாது. எனவே அவற்றை நாமே வாங்கி லாரியில் கொண்டு வரவேண்டும். கேரளாவிலும் ஒரு தனியார் நிறுவனம் பயோ கேஸ் சிஸ்டத்தை தயாரிக்கிறது. இது போல, தமிழ் நாடு நீங்கலாக(அப்படித்தான் நினைக்கிறேன்) பல மாநிலங்களில் தயாரிக்கிறார்கள்.ARTI என்ற என்.ஜி.ஓ-வின் விபரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Appropriate Rural Technology Institute (ARTI),
2nd floor, Maninee Apartments,
Survey No.13, Dhayarigaon,
PUNE - 411 041
MAHARASHTRA.
Ph. 9120-2439 2284
email:arti_pune@vsnl.net

தொலை தூரத்தில் வசிப்பவர்கள், லோக்கலில் கிடைக்கும் பி.வி.சி தண்ணீர் தொட்டிகளை உபயோகித்து அவர்களாகவே செய்து கொள்ளும் வகையில் அடுப்பு மற்றும் முக்கியமான் சில பிளம்பிங் பொருட்களை " கிட்" வடிவத்தில் செய்முறை குறிப்புடன் அவர்கள் செலவிலேயே அனுப்பி வைக்கிறார்கள். அதன் விலை உத்தேசமாக ரூ.2,500 ஆகும். இதுபோக பி.வி.சி தண்ணீர் தொட்டி இரண்டு, பி.வி.சி. பைப் போன்றவற்றை உள்ளூர் கடைகளில் வாங்கி கொள்ளலாம். நாம் விரும்பினால் ரூ.100 செலுத்தி செய்முறைக்கான வீடியோ டி.வி.டி-ஐ வாங்கி கொள்ளலாம்.

"கிட்" வடிவத்தில் அவர்கள் கொடுக்கும் பொருட்கள் என்ன என்பதையும் அவற்றின் விலையை பற்றியும் தெரிந்து கொள்ள மெயில் அனுப்பி இருக்கிறேன். பதில் கிடைத்ததும் அதன் விபரங்களை வரும் தொடர் பதிவில் கூறுகிறேன்.

அடுத்த பதிவில், லோக்கலில் கிடைக்கும் 1500 லிட்& 1000 லிட் பிளாஸ்டிக் தண்ணீர் தொட்டியை (SINTEX WATER TANK) உபயோகித்து எப்படி இந்த சிஸ்டத்தை செய்வது என்பதை "Do-It-Yourself" என்ற முறையில் விளக்கப்படங்களுடன் எழுதுகிறேன்.

கருத்துகள் இல்லை: