வியாழன், 24 அக்டோபர், 2013

சிலிண்டர் சிக்கனம் தேவை இக்கணம்!

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்), தங்கள் வருகைக்கு நன்றி மீண்டும் வருக


அடுப்பில் பால் வைத்தது தெரியாமல், அது பொங்கி வழிந்து ஓட, தினமும் பொங்கலோ பொங்கல்கொண்டாடுவது...பாத்திரத்தில் வைத்தது வற்றி, பாத்திரமும் கருகியது தெரியாமல் சீரியல் கதாபாத்திரத்தில் ஒன்றிப் போவது...சமையலறை சத்தங்களை மறந்து செல்போன் சிணுங்கலில் மூழ்குவது...மூன்று வேளைகளுக்கும் புதிது புதிதாக, ஆவி பறக்க சமைத்து சாப்பிடுவது...இனி இப்படி எதுவுமே சாத்தியம் ஆகாது!

 வருடத்துக்கு ஒரு வீட்டுக்கு இனிமேல் 6 சிலிண்டர்கள் மட்டுமே அனுமதிஎன்று அறிவித்திருக்கிறது மத்திய அரசு. கேஸ் விலையை உயர்த்தாமல், அதே வேளை, கேஸ் சப்ளையில் புதிய கட்டுப்பாடுகளையும் விதித்திருக்கிறது. அதன்படி, இப்போதைய விலையான ரூபாய் 386.50-க்கு ஒரு வருடத்துக்கு 6 சிலிண்டர்கள் மட்டுமே பெற முடியும். 6 சிலிண்டர்கள் போதாது என்கிறவர்கள், ஒரு சிலிண்டருக்கு ரூபாய் 733.50 செலுத்தி வாங்கிக் கொள்ளலாம்.

ரூபாய் 386.50 செலுத்தி, நாம் வீடுகளில் உபயோகிக்கிற சிலிண்டரின் எடை 14.2 கிலோ. ஆனால், அதன் உண்மையான விலை ரூபாய் 733.50. ஒவ்வொரு சிலிண்டருக்கும் மத்திய அரசு ரூ.347ஐ மானியமாகக் கொடுப்பதாலேயே நமக்கு சிலிண்டரின் விலை 386.50க்குக் கிடைக்கிறது.
முதல் நடவடிக்கையாக அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை, 3 சிலிண்டர்கள் மட்டுமே மானியத் தொகைக்கு கிடைக்கும் என மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. அதற்குள் சமாளிக்கிற மக்கள் தப்பித்துக் கொள்வார்கள். முடியாதவர்கள், மானியமில்லாத சிலிண்டர் விலையைக் கொடுத்துதான் உபரி சிலிண்டர் வாங்க வேண்டும்.

ஒரே நபர் உள்ள குடும்பத்துக்கும் சரி, வீடு கொள்ளாமல் உறவுகள் சூழ்ந்த கூட்டுக்குடும்பத்துக்கும் சரி... ஒரே கட்டுப்பாடுதான்! எப்படி சமாளிக்கப் போகிறார்கள் மக்கள்?

‘‘நான், என் கணவர், எங்க மகள், என் கணவரோட சகோதரர், சகோதரின்னு 5 பேர் கொண்ட குடும்பம் எங்களுடையது. பென்ஷன்ல ஓடற குடும்பம்... வாடகை வீடு. எங்களுக்கு ஒரு சிலிண்டர் சரியா ஒரு மாசத்துக்குத்தான் வரும். முன்னல்லாம் 35-40 நாளைக்கு வந்திட்டிருந்த சிலிண்டர், இப்ப 29 நாள்லயே இழுக்க ஆரம்பிக்குது. சிலிண்டரோட கொள்ளளவுலயும் ஏதோ கோல்மால் நடக்குதோன்னு யோசிக்க வைக்குது.

இத்தனைக்கும் எங்க வீட்ல ரெண்டு வேளைதான் சமையல். காலையில எல்லாருக்கும் கஞ்சி. மதியத்துக்கு சாப்பாடு. ராத்திரிக்கு டிபன். அநாவசிய சமையல் கிடையாது. சிலிண்டர் தட்டுப்பாடு ஆரம்பிச்சதுமே, பாதி சமையலை இன்டக்ஷன் ஸ்டவ்வுக்கு மாத்தினோம். 900 ரூபாய் கட்டிக்கிட்டிருந்த இபி பில், இப்ப, 2 ஆயிரத்துல வந்து நிக்குது. ஆக.... இன்டக்ஷன் ஸ்டவ்வையும் ஓரம் கட்ட வேண்டிய நிலை. சரி... வாரத்துல ஒரு நாள் வெளியில சாப்பிடலாம்னா, எங்களை மாதிரி சீனியர் சிட்டிசன்களுக்கு வெளி சாப்பாடு ஏத்துக்கிறதில்லை.

ஒரு பக்கம் ஹோட்டல் செலவு... இன்னொரு பக்கம் மெடிக்கல் செலவுன்னு அது இரட்டிப்புச் செலவாயிடுது. மொத்தத்துல சொன்னா, நாலா பக்கமும் தீயை மூட்டி விட்டு, நடுவுல உட்கார வச்ச மாதிரி ஒரு நிலைமையிலதான் எங்களை மாதிரி மிடில் கிளாஸ் மக்கள் இருக்கோம். போகிற போக்கைப் பார்த்தா, கரி அடுப்புக்கும், ஆதிவாசிகள் சாப்பிட்ட மாதிரி இலை, தழை உணவுக்கும் பழகறதைத் தவிர வேற வழி இருக்காது போலருக்கு...’’ - நடுத்தரக் குடும்பங்களின் பிரதிநிதியாகப் பேசுகிறார் ராஜேஸ்வரி மகாதேவன்.

புலம்பல்களும் போராட்டங்களும் ஒரு பக்கம் தொடர்ந்தாலும், எரிபொருள் சிக்கனம் என்கிற ஒன்றுதான் இப்போதைக்கு இந்தப் பிரச்னைக்கான ஒரே தீர்வு. சரியான திட்டமிடல் இருந்தால், ஒரு சிலிண்டரை 2 மாதங்கள் வரை உபயோகிக்க முயற்சிக்கலாம். எரிபொருளை மிச்சப்படுத்த டிப்ஸ் தருகிறார் பிரபல சமையல் கலை நிபுணர் மல்லிகா பத்ரிநாத்.

கொஞ்சமாக சமைப்பதற்கு சிறிய பாத்திரத்தையும், அதிகம் சமைக்க அகலமான, பெரிய பாத்திரத்தையும் உபயோகிக்கவும். சமைக்கத் தேவையான அளவு தண்ணீரை மட்டுமே உபயோகிக்கவும். தேவைக்கு அதிகமான தண்ணீர், எரிபொருளை வீணாக்கும்.

சமைப்பதற்கு முன் சமையலுக்குத் தேவையான எல்லா பொருள்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும். அடுப்பைப் பற்ற வைத்து விட்டு, பிறகு ஒவ்வொன்றாகத் தேடுவது வேண்டாம்.

பிரஷர் குக்கர் சமையல் சிக்கனமானது. சாதம், பருப்பு, காய்கறிகள் என எல்லாவற்றையும் ஒன்றாக வைத்து, ஒரே முறையில் சமைத்து விடலாம்.

மூடி போட்டு சமைக்க வேண்டியவற்றை மூடி வைத்தே சமைக்கவும். மூடுவதால் ஆவி வெளியேறாமல், உணவு சீக்கிரம் சமைக்கப்படும். எரிபொருளும் மிச்சமாகும்.

நான்ஸ்டிக் பாத்திரங்களும், காப்பர் பாட்டம் பாத்திரங்களும் சீக்கிரம் சமையலை முடிக்க உதவும். பால் காய்ச்ச, இட்லி வேக வைக்கவெல்லாம் விசில் வைத்த பாத்திரங்கள் பெஸ்ட். வெந்ததும் விசில் சத்தம் வருவதால், சரியான நேரத்தில் அடுப்பை அணைத்து, எரிபொருளை மிச்சப்படுத்தலாம்.

தண்ணீர் கொதிக்க வைக்கும் போது, எப்போதும் பக்கத்திலேயே இருந்து கொதித்ததும் அடுப்பை அணைக்கவும். பலரும் தண்ணீர் தளதளவென கொதித்து வழிகிற வரை விட்டுவிட்டு, வேறு வேலையைப் பார்த்துக் கொண்டிருப்பார்கள். அது தவறு.

சமையலறையில் இருக்கும் போது, இடையிடையே டி.வி பார்ப்பது, போன் பேசுவது, அரட்டை அடிப்பது போன்றவை வேண்டாம்.
ஃப்ரிட்ஜில் இருந்து எடுத்து சூடு செய்ய வேண்டிய பொருள்களை, அரை மணி நேரத்துக்கு முன்னதாகவே எடுத்து, அறை வெப்பநிலைக்கு வந்த பிறகு சூடாக்கலாம்.

குறைந்த தணலில் சமைப்பதே சிறந்தது. சமைக்கிற பொருள் கொதிக்கிற வரை நல்ல தீயில் வைத்துவிட்டு, பிறகு சிம்மில் வைத்து சமைத்தால், எரிபொருள் மிச்சமாகும்.

மிக்ஸ் அண்ட் மேட்ச்சமையலுக்குப் பழகலாம். அதாவது ஒரே நேரத்தில் பிரஷர் குக்கர், மைக்ரோவேவ் அவன், இன்டக்ஷன் அடுப்பு அல்லது எலக்ட்ரிக் குக்கர் எனப் பலதையும் வேறு வேறு உபயோகத்துக்குப் பயன்படுத்தலாம்.

கேரட், பீட்ரூட், பீன்ஸ் போன்ற காய்களை அப்படியே முழுசாக பிரஷர் குக் செய்யவும். பிறகு தேவையான அளவில் வெட்டி, கூட்டோ, குருமாவோ செய்தால் எரிபொருள் மிச்சமாகும்.

கேஸ் அடுப்பை அவ்வப்போது சுத்தம் செய்வது மிக முக்கியம். சமைக்கிற உணவு பொங்கி வழிந்து, பர்னர் ஓட்டைகளை அடைத்துக் கொண்டிருந்தால், ஒரு பக்கம் சரியாக எரியாது. இன்னொரு பக்கம் அதிகமாக எரியும்.

நன்றி - dinakaran.com

உங்கள் கருத்துகளை கேள்விகளை பின்னுட்டமிடுங்கள் PLEASE SHARE YOUR COMMENTS (அ) என்னை தொடர்புகொள்ளவும் தொடர்புக்கு MINSARAULAGAM@GMAIL.COM DEENZR@GMAIL.COM

கருத்துகள் இல்லை: