வெள்ளி, 28 ஜூன், 2013

ஷாக் அடித்தால் என்ன செய்வது?

  
minsaraulagam
இன்றைய வாழ்வில் மின்சாரம் என்பது மிகவும் இன்றியமையாத ஒன்று. மின்சாரம் நமக்குத் தருகிற நன்மைகளும் வசதிகளும் ஏராளம். என்றாலும், மின்சாரத்தையும் மின்கருவிகளையும் அலட்சியமாகவோ, தவறாகவோ பயன்படுத்தினால், அவை தரும் ஆபத்துகளும் அதிகம்.

மின்விபத்து ஏற்படுவது ஏன்?

வீட்டிலும் சரி, அலுவலகங்களிலும் சரி, மின்விபத்து ஏற்படுவதற்குப் பல காரணங்கள் இருந்தாலும், முக்கிய காரணங்கள் இவையே: தரமான மின்கருவிகளைப் பொருத்தாதது; மின்கருவிகள் தரமாக இருந்தாலும், அவற்றை மிகச் சரியாகப் பொருத்தாதது; பாதுகாப்பின்றி பயன்படுத்துவது; ஈர உடலோடு மின்கருவிகளைத் தொடுவது.



ஆபத்துகள் எவை?

மனித உடல், மின்சாரத்தைக் கடத்தும் என்பதால், நாம் மின்சாரத்தைத் தொடும் போது, மின்னோட்டம் உடல் முழுவதும் பரவி, இதயம், மூளை, நுரையீரல் போன்ற முக்கிய உறுப்புகளின் இயக்கத்தை நிறுத்தி, ஆபத்தை வரவழைக்கிறது. உடலில் பாயும் மின்சாரத்தின் அளவு, மின்சாரத்துடன் உடல் தொடர்பு கொண்டிருக்கும் நேரம் இவற்றைப் பொறுத்து, மூன்று வகை பாதிப்புகள் நமக்கு ஏற்படுகின்றன. (கடுமையான மின்னல் தாக்கும் போதும் இதே ஆபத்து நிகழ்வதுண்டு).

மின்சாரம் தொட்ட இடத்தில் தீப்புண்கள் உண்டாவது. தோல், தசை, நரம்பு போன்ற உடல் பகுதிகள் அழிந்துபோவது.மயக்கம் அடைவது;  அதைத் தொடர்ந்து மரணம் நிகழ்வது.

முதலில் செய்ய வேண்டியது:

ஒருவருக்கு மின்சாரம் பாய்ந்துவிட்டது என்று தெரிந்த உடனேயே மின்னோட்டத்தை நிறுத்த வேண்டும். இதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட நபரை மின் தொடர்பிலிருந்து அகற்ற வேண்டும். இதை மிகமிக கவனமாகச் செய்ய வேண்டும். அவசரப்பட்டு, முன்யோசனை இல்லாமல் மின்சாரம் பாய்ந்தவரைக் காப்பாற்றப் போகிறேன் என்று நீங்கள் அந்த நபரைத் தொடுவீர்களேயானால், உங்களுக்கும் மின்சாரம் பாய்ந்துவிடும். ஆகவே, இதில் எச்சரிக்கை அவசியம்.

காப்பாற்றும் முறை:
minsaraulagam
முதலுதவி செய்பவருக்கும் மின்சாரம் பாய்ந்தவருக்கும் இடையில் குறைந்தது ஆறு அடி இடைவெளி இருக்க வேண்டும். தடித்த, நீண்ட, உலர்ந்த மரக்கட்டையால் பாதிக்கப்பட்ட நபரை மின் தொடர்பிலிருந்து விலக்க வேண்டும். இந்தச் சமயத்தில் கையில் ரப்பர் உறைகளை அணிந்து கொள்வதும், காலில் ரப்பர் செருப்புகளை அணிந்துகொள்வதும், தரையில் ரப்பர் பாயை விரித்து அதில் நின்றுகொள்வதும் நல்லது. மரக்கட்டை கிடைக்காதபோது, அட்டைப்பெட்டியின் தடித்த பேப்பர் அட்டையைப் பயன்படுத்தலாம்.

என்ன செய்யக் கூடாது?

முதலுதவி செய்பவர் உடலில் சிறிதுகூட ஈரம் இருக்கக் கூடாது. மின்சாரம் பாய்ந்தவரைக் காப்பாற்றப் பயன்படுத்தப்படும் பொருளிலும் ஈரம் இருக்கக்கூடாது. முதலுதவி செய்பவரின் உடல் தரையுடனோ, சுவருடனோ நேரடியாகத் தொடர்பு கொண்டிருக்கக்கூடாது. எந்த ஓர் உலோகத்தாலும் மின்சாரம் பாய்ந்தவரைக் காப்பாற்ற முயலக் கூடாது.

முதலுதவி என்ன?

மின் விபத்தினால் உடனடியாக மரணம் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம் என்பதால், முதலில் 108 ஆம்புலன்ஸை அழைத்துவிடுங்கள். மருத்துவ உதவி உடனே கிடைப்பதற்கும் ஏற்பாடு செய்துவிடுங்கள். மின் இணைப்பைத் துண்டித்து, பாதிக்கப்பட்ட நபரை மின்தொடர்பிலிருந்து அப்புறப்படுத்தியதும், அந்த இடத்திலேயே   அவருக்கு முதலுதவி செய்வதைவிட, சிறிது தொலைவு கொண்டு சென்று, முதலுதவி செய்வதே நல்லது. பாதிக்கப்பட்ட நபருக்கு சுவாசம் இருக்கிறதா என்று பாருங்கள்.

சுவாசம் இல்லையென்றால், ‘செயற்கை சுவாசம்’ தர வேண்டும். இது குறித்து சென்ற இதழில் பார்த்துள்ளோம்.  அடுத்து, இதயத்துடிப்பு உள்ளதா என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். இதற்கு, அவருடைய மணிக்கட்டுக்கு அருகில் விரல்களை வைத்துப் பார்த்தால் நாடித்துடிப்பு இருப்பதை உணரலாம். அல்லது கழுத்தின் இரு பக்கங்களிலும் விரல்களால் தடவிப் பார்த்தால், இதயத் துடிப்பை உணரலாம்.  இதயத்துடிப்பு இல்லையென்றால், ‘இதய மசாஜ்’ முறையைப் பயன்படுத்தி, இதயத்துடிப்பு மீண்டும் வருவதற்கு உதவ வேண்டும். ‘இதய மசாஜ்’ செய்யும் முறையையும் கடந்த இதழில் படித்திருக்கிறோம்.

சமயங்களில், பாதிக்கப்பட்ட நபர் அதிர்ச்சி காரணமாக மயக்கத்தில் மட்டும் இருப்பார். அப்போது, அவருடைய முகத்தில் தண்ணீரை வேகமாக அடிக்க வேண்டும், இதனைத் தொடர்ந்து தலையைத் தாழ்த்தியும், பாதங்களை உயர்த்தியும் பிடித்தால், மயக்கம் தெளியும். தீக்காயம் காணப்பட்டால், காயத்தைத் தண்ணீரீல் நனைத்தத் துணியால் 15 நிமிடங்களுக்கு ஒத்தடம் கொடுங்கள்.  அதன்பின்னர், காயத்தின்மீது ‘சில்வர் சல்ஃபாடயசின்’ மருந்தைத் தடவி, கட்டுப்போடுங்கள். காலதாமதமின்றி   அவரை  மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்கு ஏற்பாடு செய்யுங்கள்.

பாதுகாப்புக்கு 15 வழிகள்!

minsaraulagam
மின் வயர்களையும் மின்கருவிகளையும் குழந்தைகள் தொடாத அளவுக்கு உயரமான இடங்களில் வையுங்கள்.

மின் ஆபத்து பற்றிக் குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுங்கள்.

மின் கருவிகளை வாங்கும்போது, அவற்றைப் பாதுகாப்பாகப் பயன்படுத்தும் முறைகளையும் தெளிவாகத் தெரிந்து கொண்டு பின்பற்றுங்கள்.

மின்கருவிகளை இடம் விட்டு இடம் நகர்த்தும்போது மின் இணைப்பை நிறுத்தி விடுங்கள்.

ஈரத்தோடு மின் கருவிகளைத் தொடாதீர்கள்.

தரமான, உயர்ரக மின்வயர்கள், மின்பொத்தான்கள், மின்கருவிகள் முதலியவற்றையே பயன்படுத்துங்கள்.

மின் கருவிகளை நிறுவுவதற்கும் மின்கருவிகளைப் பழுது பார்ப்பதற்கும் தொழில்முறையில் படித்த, தகுதிபெற்ற மின்வினைஞரையே பயன்படுத்துங்கள்.

தொங்கிக்கொண்டிருக்கும் மின்கம்பிகளையோ,மின்வயர்களையோ தொடாதீர்கள்.

உடைந்துபோன அல்லது பழுதான மின்கருவிகளைப் பயன்படுத்தாதீர்கள்.

மின்வயர்கள் உறை இழந்திருந்தால், உடனடியாக அவற்றைச் சரிசெய்யுங்கள் அல்லது புதிய மின்வயர்களைப் பயன்படுத்துங்கள்.

மின்பொத்தான் துவாரத்தில் ஊக்கு, கம்பி போன்ற உலோகக்குச்சிகளைச் சொருகாதீர்கள்.

மின்பொத்தான் துவாரங்களில் பாது காப்பான ’மின்மூடி’களை மட்டுமே சொருக வேண்டும். அவசரத்துக்கு வயர் முனைகளை மட்டும் சொருகுவதைத் தவிருங்கள்.

திறந்திருக்கும் மின்பொத்தான் துவாரங்களுக்கு மூடி போடுங்கள்.

வானொலி, தொலைக்காட்சிப்பெட்டி, சலவைப்பெட்டி, தண்ணீர் வெப்பமூட்டி, கைப்பேசி மின்னூட்டி முதலியவை பயன்பாட்டில் இல்லாதபோது மின் இணைப்பைத் துண்டித்துவிடுங்கள்.

உயர்அழுத்த மின்சாரம் செல்லும் இடத்துக்கு அருகில் செல்லாதீர்கள்.

டாக்டர் கு.கணேசன்

கருத்துகள் இல்லை: