சனி, 29 ஜூன், 2013

மைக்கேல் ஃபாரடே (1791 - 1867)


 இது மின்சார ஊழி. இந்த ஊழியைச் சில சமயம் விண்வெளி ஊழி என்றும் சில சமயம் அணு ஊழி என்றும் அழைப்பர். எனினும், விண்வெளிப் பயணம், அணு ஆயுதங்கள் ஆகியவற்றின் உள்ளார்ந்த முக்கியத்துவம் என்னவாக இருப்பினும் அவை நமது அன்றாட வாழ்வில் பெரும்பாதிப்பை ஏற்படுத்தி விடவில்லை. ஆனால், மின்சாதனங்களை நாம் அன்றாடம் இடைவிடாமல் பயன் படுத்துகிறோம். உண்மையைக் கூறுவதாயின், நவீன உலகில் எந்த ஒரு தொழில் நுட்பமும், மின்சாரத்தின் பயன்பாட்டைப் போல் நம் வாழ்வில் ஊடுருவிப் புகுந்து பரவியிருக்கவில்லை.



மின்சாரத்தை நம் வயப்படுத்துவதற்குப் பல அறிஞர்கள் அருந்தொண்டாற்றியிருக்கிறார்கள். சார்லஸ் அகஸ்டைன் டி கூலோம்ப், அலெக்சாண்டிரோ, வால்ட்டா கோமகன், ஹான்ஸ் கிறிஸ்டியன் ஊர்ஸ்டட், ஆண்டிரியோ மாரி ஆம்பியர் ஆகியோர் அவர்களுள் முக்கியமாகக் குறிப்பிடத் தக்கவர்கள். மற்றவர்கள் அனைவரையும் விட கோபுரம் போல் உயர்ந்து நிற்பவர்கள் மைக்கேல் ஃபாரடே, ஜேம்ஸ் கிளார்க் மாக்ஸ்வெல் ஆகிய இருபெரும் பிரிட்டிஷ் விஞ்ஞானிகளே ஆவர். இவ்விரு விஞ்ஞானிகள் பணியும், ஒருவர் பணியை மற்றவர் பணி முழுமையாக்கும் வகையில் அமைந்திருந்த போதிலும், இவ்விருவரும் எந்த வகையிலும் உடனிணைந்து பணியாற்றியவர்கள் அல்லர். இவர்கள் ஒவ்வொருவரின் தனிப் பட்ட சாதனைகளை இந்தப் பட்டியலில் அவர்கள் உயர்ந்த இடத்தைப் பெறுவதற்குப் போதுமான தகுதிகள் எனலாம்.

இங்கிலாந்திலுள்ள நியூவிங்டனில் 1791 ஆம் ஆண்டில் மைக்கேல் ஃபாரடே பிறந்தார். ஓர் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவராக இருந்தமையால் இவர் பெரும்பாலும் தாமாகவே கல்வி பயின்றார். தமது 14 ஆம் வயதில் புத்தகம் கட்டுமானம் செய்வதிலும், புத்தகம் விற்பனை செய்வதிலும் ஒரு பயிற்சியாளராகச் சேர்ந்தார். அப்போது ஏராளமான நூல்களைப் படிப்பதற்கு இவருக்கு வாய்ப்புக் கிடைத்தது. இவர் தம் 20 ஆம் வயதில் புகழ்பெற்ற ஆங்கிலேய விஞ்ஞானி சர் ஹம்ஃப்ரி டேவி என்பவரின் சொற்பொழிகளைக் கேட்டார். அதிலிருந்து அறிவியலில் இவருக்கு ஆர்வம் பிறந்தது. தம்முடைய ஆர்வத்தை விளக்கி இவர் டேவிக்குக் கடிதம் எழுதினார். இதன் விளைவாக டேவியின் உதவியாளராக இவருக்கு வேலை கிடைத்தது. சில ஆண்டுகளுக்கு இவர் தாமே சொந்தமாகப் பல கண்டுபிடிப்புகளைச் செய்யலானார். இவர் கணிதத்தில் புலமை பெற்றிருக்கவில்லை யென்றாலும், பரிசோதனை இயற்பியலறிஞர் என்ற முறையில் இவர் ஈடிணையற்றவராகத் திகழ்ந்தார்.

மின்சாரவியலில் தமது முதலாவது முக்கியமான புத்தமைப்பினை ஃபாரடே 1821 ஆம் ஆண்டில் செய்தார். அதற்கு ஈராண்டுகளுக்கு முன்னர், அருகிலுள்ள கம்பியில் ஒரு மின்னோட்டம் பாயுமானால் ஒரு காந்தத் திசை காட்டியின் (Magnetic Compass) முள் ஒரு பக்கமாகத் திரும்பும் என்பதை ஊர்ஸ்டம் கண்டறிந்திருந்தார். இதிலிருந்து, காந்தத்தை நிலையாகப் பொருத்தி வைத்துவிட்டால், கம்பி இயங்கக் கூடும் என ஃபாரடே ஊகித்தார். அந்த ஊகத்தின் அடிப்படையில் ஆராய்ச்சி செய்து புதுமையான சாதனம் ஒன்றை உருவாக்குவதில் அவர் வெற்றி கண்டார். இந்தச் சாதனத்தில், கம்பியின் வழியாக ஒரு மின்னோட்டம் பாய்ந்து கொண்டிருக்கும் வரையிலும் ஒரு காந்தத்தின் அருகாமையில் ஒரு கம்பி தொடர்ந்து சுழன்று கொண்டே இருந்தது. ஃபாரடே கண்டுபிடித்த இந்தச் சாதனந்தான் முதலாவது மின்சார மோட்டார் ஆகும். ஒரு பருப்பொருளை இயங்கச் செய்வதற்கு ஒரு மின்னோட்டத்தைப் பயன் படுத்திய முதலாவது சாதனம் இதுவாகும். ஃபாரடேயின் இந்தச் சாதனம் இன்று பத்தாம் பசலியாகத் தோன்றிய போதிலும் இன்றைய உலகில் பயன்படும் மின்சார மோட்டார்கள் அனைத்திற்கும் இதுதான் மூதாதை என்பதில் ஐயமில்லை.

இந்தக் கண்டுபிடிப்பு மாபெரும் முன்னேற்றமாக அமைந்தது. ஆனால், அந்நாளில் பழைய வேதியியல் மின் கலங்கள் வாயிலாகவே மின்சார உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. மின்சார உற்பத்திக்கான வேறு சிறந்த முறை எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. எனவே, மின் உற்பத்திக்கான வேறு முற்போக்கான முறை கண்டுபிடிக்கப்படாதிருந்த வரையில் ஃபாரடே கண்டுபிடித்த மின்சார மோட்டாருக்கு நடைமுறையில் பயன்பாடு மிகக் குறைவாகவே இருந்தது. காந்தத்தைப் பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்யும் முறையொன்று இருக்க வேண்டும் என்று ஃபாரடே உறுதியாக நம்பினார். அத்தகைய முறையினைக் கண்டு பிடிப்பதில் தீவிரமாக ஈடுபட்டார். நிலையாக இருக்கும் ஒரு காந்தம், அருகாமையிலிருக்கும் ஒரு கம்பியில் ஒரு மின்னோட்டத்தைத் தூண்டாது என்பது அறியப் பட்டிருந்தது.

ஆனால், ஒரு கம்பிக்குள் வளையத்தினுள் ஒரு காந்தத்தைச் செலுத்தினால், அந்தக் காந்தம் இயங்கிக் கொண்டிருக்கும் வகையில் அந்தக் கம்பியில் மின்சாரம் பாய்ந்து கொண்டிருக்கும் என்பதை 1831 ஆம் ஆண்டில் ஃபாரடே கண்டுபிடித்தார். இந்த விளைவுக்கு மின்காந்தத் தூண்டல் (Electromagnetic induction) என்று பெயர். இந்தத் தூண்டலைக் கட்டுப்படுத்தும் விதியினையும் ஃபாரடே கண்டுபிடித்தார். இந்த விதி ஃபாரடே விதி (Faraday"s law) என அழைக்கப் படுகிறது. இந்த விதியைக் கண்டு பிடித்தது. ஃபாரடேயின் மிகப் பெரிய தனிச் சாதனை எனக் கருதப்படுகிறது.

இரு காரணங்களுக்காக இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கண்டுபிடிப்பாகப் போற்றப் படுகிறது. முதலாவதாக, மின்காந்தவியல் (Electromagnetism) பற்றிய கோட்பாடு அறிவுத் திறனில் ஃபாரடேயின் விதி அடிப்படை முக்கியத்துவம் வாய்ந்ததாக விளங்குகிறது. இரண்டாவதாக, மின்காந்தத் தூண்டலைத் தொடர்ச்சியான மின்னோட்டத்தை உற்பத்தி செய்வதற்கு பயன்படுத்த முடியும். இதனை முதலாவது மின்னாக்கப் பொறியினை (Electric Dynamo) ஃபாரடே தாமே தயாரித்துச் செயல் விளக்கம் செய்து காட்டினார். இன்று நமது நகரங்களுக்கும், தொழிற்சாலைகளுக்கும் மின்விசையை வழங்குகிற நவீன மின்னாக்கப் பொறிகள், ஃபாரடேயின் சாதனத்தை விட மிகவும் மேம்பட்டவையாயினும், அவை அனைத்தும் மின்காந்தத் தூண்டல் என்னும் ஒரே தத்துவத்தின் அடிப்படையில் அமைந்தவையாகும்.

வேதியியல் துறையிலும் ஃபாரடே முக்கிய சாதனைகளைப் புரிந்துள்ளார். வாயுக்களைத் திரவமாக்குவதற்கான முறைகளை அவர் வகுத்தார். பென்சீன் போன்ற பல்வேறு வேதியியற் பொருள்களையும் அவர் கண்டுபிடித்தார். மின்னோட்டங்களின் வேதியியல் விளைவுகளை ஆராயும் மின் வேதியியல் துறையில் அவர் ஆற்றிய பணியும் பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஃபாரடே மிகக் கவனமாகப் பரிசோதனைகள் நடத்தி மின்பகுப்பாய்வு (Electrolysis) பற்றிய இரு விதிகளை வகுத்தமைத்தார். இந்த விதிகள் ஃபாரடேயின் பெயரிலேயே அழைக்கப்படுகின்றன. இவ் விதிகள், மின் வேதியியலுக்கு அடித்தளமாக அமைந்துள்ளன. மின் வேதியியல் துறையில் பயன்படுத்தப்படும் நேர்முனை (Anode), எதிர்முனை (Cathode), மின் முனை (Electrode), இயனி (Ion) என்பன போன்ற முக்கியக் கலைச் சொற்களை உருவாக்கிப் பிரபலப்படுத்திய பெருமையும் ஃபாரடேயைச் சேரும்.

விசையின் காந்தக் கோடுகள் (Magnetic lines of Force), விசையின் மின்கோடுகள் (Electric Lines of Force), என்னும் முக்கியமான கொள்கையை இயற்பியலில் புகுத்தியவர் ஃபாரடேயேயாகும். காந்தங்களுக்கு முக்கியத்துவமளிக்காமல், காந்தங்களுக்கிடையிலான காந்தப்புலத்திற்கு (Field) முக்கியத்துவமளிப்பதன் மூலம் பல முக்கியமான முன்னேற்றங்கள் ஏற்படுவதற்கு ஃபாரடே வழி வகுத்தார். ஒரு காந்தப் புலத்தின் வழியாக மின்முனைப்பாக மூட்டிய (Polarized) ஒளியைச் செலுத்தினால் அந்தக் காந்தப் புலத்தின் மின் முனைப்பாக்கம் (Polarization) மாறுதலடைகிறது என்பதையும் ஃபாரடே கண்டறிந்தார். ஒலிக்கும் காந்தத்திற்குமிடையே ஒரு தொடர்பு உண்டு என்பதை இந்தக் கண்டுபிடிப்பு முதன் முதலில் உணர்த்தியது. அந்த வகையில் இக்கண்டுபிடிப்பு முக்கியமான ஒன்றாகும்.

ஃபாரடே அறிவுத்திறன் வாய்ந்தவராக மட்டும் இருக்கவில்லை. அவர் அழகிய தோற்றமுடையவராகவும் இருந்தார். அறிவியல் குறித்து கேட்போரைப் பிணிக்கும் வகையில் சொற்பொழிவாற்றும் திறனும் பெற்றிருந்தார். எனினும், அவர் மிக எளிமையாக வாழ்ந்தார். புகழ், பணம், விருதுகள் ஆகியவற்றை அவர் பொருட்படுத்தவே இல்லை. வீரத்திருத்தகைப் பட்டம் (Knighthood) வழங்கபட்ட போது அதை ஏற்க மறுத்து விட்டார். இயற்கையறிவை வளர்ப்பதற்காக நிறுவப் பெற்றிருந்த பிரிட்டிஷ் ராயல் கழகத்தின் தலைவர் பதவியை ஏற்கவும் மறுத்துவிட்டார். அவர் நீண்ட காலம் மகிழ்ச்சியான இல்லற வாழ்க்கை நடத்தினார். ஆனால், அவருக்குக் குழந்தைகள் இல்லை. அவர் 1867 இல் லண்டன் அருகே காலமானார்.

கருத்துகள் இல்லை: