By என். ராமதுரைDINAMANI.COM
கூடங்குளம் அணுமின்சார நிலையம் தொடர்பாக எழுந்த சர்ச்சையின்
பின்னணியில் பலரும் தெரிவித்த ஒரு யோசனை பெரிய அளவில் சூரிய மின்சாரத்தின் பக்கம்
திரும்பலாமே என்பதுதான். சூரிய ஒளியைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்க முடியும்.
இது நன்கு நிரூபணமான ஒன்று. இதைத்தான் சூரிய மின்சாரம் என்கிறார்கள். சூரிய ஒளியைக் கொண்டு மின்சாரம் தயாரிப்பது
என்பது ஏதோ இப்போது தோன்றியது அல்ல. 1958}ஆம் ஆண்டில்
பூமியைச் சுற்றும் வகையில் பறக்கவிடப்பட்ட வான்கார்ட் என்ற அமெரிக்க
செயற்கைக்கோளில்தான் சூரிய மின்பலகை முதல் தடவையாகப் பயன்படுத்தப்பட்டது.
பின்னர் செயற்கைக்கோள்களில் இதை இணைப்பது
வாடிக்கையாகியது. நீங்கள் இப்போது உங்கள் வீடுகளில் டிவியில் பல்வேறு சேனல்களில்
நிகழ்ச்சிகளைக் காண்கிறீர்கள் என்றால் அதற்கு சூரிய மின்சாரமே காரணம். டிவி
நிகழ்ச்சிகளை நீங்கள் காண்பதற்கு சுமார் 36 ஆயிரம் கிலோ
மீட்டர் உயரத்தில் பறக்கின்ற தகவல் தொடர்பு செயற்கைக்கோள்கள் முக்கியமாக
உதவுகின்றன. இந்த செயற்கைக்கோள்களில் உள்ள கருவிகள் இயங்குவதற்கு மின்சாரம் தேவை. செயற்கைக்கோள்களின் இருபுறங்களிலும் இறக்கை
போல பொருத்தப்பட்ட பெரிய வடிவிலான சூரிய மின் பலகைகள் மீது சூரிய ஒளி படும்போது
அவற்றில் மின்சாரம் உற்பத்தியாகிறது. அந்த மின்சாரத்தை செயற்கைக்கோளில் உள்ள
கருவிகள் பயன்படுத்திக் கொள்கின்றன.
பல ஆண்டுக்காலம் சூரிய மின்சார உற்பத்தி
பெரிய அளவில் நடக்கின்ற இடம் விண்வெளியாகவே இருந்தது. சூரிய மின் பலகைகளைத்
தயாரிப்பதற்கு நிறைய செலவு ஆனதே இதற்குக் காரணம். சூரிய மின் பலகைகளைத்
தயாரிப்பதில் மேலும் மேலும் முன்னேற்றம் ஏற்பட்டது. இவற்றுக்கான மூலப் பொருளின்
செலவு படிப்படியாகக் குறைய ஆரம்பித்தது. இதன் பலனாக மின் இணைப்புக்கு கம்பிகளை
இழுக்க முடியாதபடி எட்டாக் கையாக உள்ள இடங்களில் மின் உற்பத்திக்கு சூரிய மின்
பலகைகள் பயன்படுத்தப்பட்டன. தமிழகத்தில் பல ஆண்டுகளுக்கு முன்னரே இம்மாதிரியான
இடங்களில் சூரிய மின் பலகைகள் பயன்படுத்தப்பட்டன. பின்னர் அடுத்த கட்டமாக கணிசமான அளவில்
மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு சூரிய மின்பலகைகள் பயன்படுத்தப்படலாயின. இதைத்
தொடர்ந்து சூரிய மின்சார நிலையங்கள் தோன்றின. சூரிய மின்சார நிலையம் பார்ப்பதற்கு
மின்சார நிலையம் போலவே இராது. திறந்த வெளியில் அடுத்தடுத்து ஏராளமான மின் பலகைகள்
நிறுவப்பட்டிருக்கும். இவை ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்டிருக்கும்.
எனினும் உற்பத்தி அளவில் சூரிய மின்சார
நிலையங்களை நிலக்கரியால் இயங்கும் அனல் மின் நிலையங்கள் அல்லது அணுமின்
நிலையங்களுடன் ஒப்பிட முடியாது. ஏனெனில் சூரிய மின் நிலையத்தின் மின்சார உற்பத்தி
மிகவும் குறைவானதே. உலகிலேயே மிகப் பெரிய சூரிய மின்சார நிலையம் சீனாவில் உள்ளது.
இதன் மின் உற்பத்தித் திறன் 200 மெகாவாட். இத்துடன் ஒப்பிட்டால்
உலகிலேயே மிகப் பெரிய அனல் மின் நிலையத்தின் உற்பத்தித் திறன் 5700 மெகாவாட். இது பார்மோசாவில் உள்ளது. உலகிலேயே மிகப் பெரிய அணுமின்
நிலையத்தின் (ஜப்பானில் உள்ளது) உற்பத்தித் திறன் சுமார் 8000 மெகாவாட். வேறு விதமாகச் சொல்வதானால் இப்போதுள்ள சூரிய
மின் நிலையங்கள் அனைத்துமே மிகச் சிறியவை. சூரிய மின் நிலையங்களைக் கொண்டு ஒரு
நாட்டின் மின் தேவையைப் பூர்த்தி செய்துவிட முடியாது என்ற நிலைமை தான் இன்னமும்
உள்ளது.
சூரிய மின் நிலையங்களில் இரண்டு வகைகள்
உள்ளன. முதல் வகையில் சூரிய மின் பலகைகள் மீது வெயில் படும்போது நேரடியாக
மின்சாரம் உற்பத்தியாகிறது. உலகில் செயல்படும் சூரிய மின் நிலையங்களில் அனேகமாக
அனைத்தும் இந்த வகையைச் சேர்ந்தவை. இந்த வகையில் வெப்பம் சம்பந்தப்படாது.
இரண்டாவது வகையானது வெப்பம் சம்பந்தப்பட்டது. அதாவது திறந்த வெளியில் உயரமான
கோபுரம் இருக்கும். இதன் உச்சியில் ஒரு தொட்டியில் திரவம் இருக்கும். இந்த
கோபுரத்தைச் சுற்றிலும் முகம் பார்க்கும் கண்ணாடி போன்ற எண்ணற்ற கண்ணாடிகள்
தரையில் பொருத்தப்பட்டிருக்கும். இக்கண்ணாடிகள் அனைத்தும் சூரிய ஒளியை அக் கோபுரம்
மீது திருப்பும். இதன் விளைவாகக் கோபுர உச்சியில் உள்ள திரவம் சூடேறி கீழ்
நோக்கிப் பாயும். சூடான திரவம் ஒரு ஜெனரேட்டரை இயக்கும்போது மின்சாரம்
உற்பத்தியாகும். இவ்வகையான சூரிய மின் நிலையம் இப்போது உலகில் ஒரு சில இடங்களில்
மட்டுமே உள்ளன. இவ்வகை மின் நிலையத்திலும் மின்சார உற்பத்தி அளவு குறைவுதான்.
சூரிய மின் நிலையங்களில் பொதுவில் சில பாதக
அம்சங்கள் உள்ளன. ஆண்டில் 300 நாட்கள் வெயில் அடிக்கும் இடங்களே சூரிய மின்
நிலையங்கள் அமைப்பதற்கு உகந்தவை. தவிர, பகல் நேரங்களில்
மட்டுமே மின் உற்பத்தி சாத்தியம். சூரிய மின் பலகைகளை அமைக்க நிறைய இடம் தேவை.
மின் பலகைகள் பலவற்றின் மீது வெயில் விழ, சிலவற்றின் மீது
நிழல் விழுகின்ற நிலைமை ஒருபோதும் இருத்தல் கூடாது. அது பெரும் பாதிப்பை
ஏற்படுத்தும். மேக மூட்டம் இருந்தால் அந்த அளவுக்கு மின் உற்பத்தி பாதிக்கப்படுமே
தவிர, மற்றபடி பாதகம் இராது. பொதுவில் நடுப்பகல்
வாக்கில்தான் சூரிய மின் பலகைகள் மூலம் அதிக மின்சாரம் உற்பத்தியாகும். முற்பகல்
அல்லது பிற்பகலில் அந்த அளவுக்கு மின்சார உற்பத்தி இராது. இரவு வேளையில் மின்
உற்பத்திக்கு சாத்தியமே இல்லை. இப்படியான காரணங்களால் ஒரு நாட்டின் மொத்த
மின்சாரத் தேவையையும் சூரிய மின்சாரத்தின் மூலம் பூர்த்தி செய்ய இயலாது.
சூரிய மின்சாரம் பற்றி மக்களிடையே பொதுவில்
உள்ள ஓர் எதிர்பார்ப்பு பற்றி இங்கு குறிப்பிட்டாக வேண்டும். அரசாங்கம் அதாவது, மின் வாரியங்கள் ஆங்காங்கு சூரிய மின்சார நிலையங்களை அமைத்து மின்
பற்றாக்குறையைப் போக்க நடவடிக்கை எடுக்கும் என்று மக்களில் பலரும் நினைக்கலாம்.
ஆனால், அது முற்றிலும் தவறு. அரசாங்கம் கூறுவதே வேறு. சூரிய
ஒளியைப் பயன்படுத்தி நீங்களே மின்சாரம் தயாரித்துக் கொள்ளுங்கள். அப்படிச்
செய்வதற்கு நாங்கள் மானியம் தருகிறோம் என்றுதான் அரசாங்கம் கூறுகிறது.
அரசாங்கத்தின் இவ்வித மானிய உதவியைப் பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்வோர்
இரு வகைப்பட்டவர்கள். ஒரு வகையினர், அதாவது தனியார் துறையைச்
சேர்ந்தவர்கள் முதலீடாக நினைத்து சூரிய மின் நிலையங்களை அமைக்கிறார்கள். தாங்கள்
உற்பத்தி செய்யும் மின்சாரத்தை இந்திய அரசின் தேசிய அனல் மின் கழகத்துக்கு விற்பனை
செய்துவிடுகிறார்கள். அதாவது நீண்ட கால ஒப்பந்த அடிப்படையில் மின்சாரம் ஒரு யூனிட்
12 ரூபாய் என்ற அடிப்படையில் அவர்கள் விற்று விடுகிறார்கள.
இது நல்ல ஏற்பாடாக இருப்பதால் பல நிறுவனங்கள் இவ்விதம் சூரிய மின் நிலையங்களை
அமைக்கின்றன.
இரண்டாவது வகையினர், சொந்த உபயோகத்துக்காக சூரிய ஒளியைப் பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி
செய்து கொள்பவர்கள். தனியார் துறையிலான ஆலைகள், நிறுவனங்கள்,
வீடுகள் ஆகியோர் இப் பிரிவில் அடங்குவர். நிறுவனங்கள் அல்லது
வீடுகளின் கூரைகளில் சூரிய மின் பலகைகளைப் பொருத்தினால் போதும். பெரிய பராமரிப்பு எதுவும் தேவையின்றி
மின்சாரம் கிடைத்துக் கொண்டிருக்கும். ஆனால், ஆரம்ப
முதலீட்டுச் செலவு மிக அதிகம். அமெரிக்கா போன்ற பணக்கார நாடுகளிலேயே ஆரம்ப முதலீடு
பெரிய தொகையாகக் கருதப்படுகிறது.
தவிர, சூரிய மின்சாரம்
அதிக செலவு பிடிப்பதாகும். இதற்கான உற்பத்திச் செலவு ஒரு யூனிட்டுக்கு சுமார் 12
ரூபாயாக உள்ளது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும் உள்ள மின்சார
வாரியங்கள் சராசரியாக ஒரு யூனிட்டுக்கு ரூ. 4 முதல் ரூ. 5
வரை மின்கட்டணம் வசூலிப்பதாகக் கூறலாம். ஆகவேதான் மின்சார
வாரியங்கள் சூரிய மின்சார உற்பத்தியில் ஈடுபடத் தயாராக இல்லை. மின்சார
வாரியங்களில் பலவும் நஷ்டத்தில் இயங்கும் நிலையில் அவை ரூ. 12 செலவிட்டு மின்சாரம் உற்பத்தி செய்து அதை ரூ. 5 அல்லது
ரூ. 6-க்கு விற்க முன் வராது. நாங்கள் மானியம் தருகிறோம். நீங்களே உங்கள்
வீடு, அலுவலகம், ஆலை ஆகியவற்றின்
மாடியில் சூரிய மின் பலகைகளை நிறுவி உங்களுக்குத் தேவையான மின்சாரத்தை தயாரித்துக்
கொள்ளுங்கள் என்பதே மாநில அரசுகளின் கோஷமாக உள்ளது.
வருகிற ஆண்டுகளில் தமிழகத்தில் வசதி படைத்த
பலரும் வசதி படைத்த ஆலைகளும் எப்படியாவது மின்சாரம் கிடைத்தால் சரி என்ற
எண்ணத்தில் சூரிய மின்சாரத்துக்கு மாற வாய்ப்பு உள்ளது. இப்படி சொந்தமாக
மின்சாரத்தை உற்பத்தி செய்து கொள்வது லாபகரமானதா என்று கேட்டால் இல்லை என்றுதான்
சொல்ல வேண்டும். மின்சார வாரியம் உங்களுக்கு அளிக்கும்
மின்சாரத்தின் விலையும் சூரிய மின்சாரத்தை நீங்களே உற்பத்தி செய்வதற்கு ஆகும்
செலவும் சரி சமமாக இருக்குமானால் சூரிய மின்சாரம் உங்களுக்கு லாபகரமானதாக
இருக்கும். அமெரிக்கா போன்ற மேலை நாடுகளிலேயே இந்த சம நிலை எட்டப்படவில்லை. ஓட்டு
உட்பட பல்வேறு காரணங்களால் மின் கட்டணம் குறைவான நிலையில் வைக்கப்பட்டுள்ள
இந்தியாவில் இந்த சம நிலை எட்டப்பட பல ஆண்டுகள் ஆகலாம்.
இது ஒருபுறம் இருக்க, அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் பின்பற்றப்படுகின்ற ஒரு ஏற்பாடு
இந்தியாவுக்கும் வருமானால் இங்கும் சூரிய மின்சாரம் வேகமாகப் பரவலாம். ஆரம்ப
முதலீடு அதிகம் என்பதுதானே பலருக்கும் பிரச்னையாக உள்ளது. அதை கலிபோர்னியா
நிறுவனம் கவனித்துக் கொள்கிறது. அதாவது அவர்களே எல்லாச் செலவும் செய்து உங்கள்
வீட்டு மாடியில் சூரிய மின் பலகைகளை நிறுவி விடுவார்கள். நீங்கள் மாதாமாதம் மின்
கட்டணம் கட்டுவது போல அந்த நிறுவனத்துக்குப் பணம் கட்டினால் போதும். இந்த
ஏற்பாட்டில் அந்த நிறுவனத்துக்கு ஆதாயம் உள்ளது. அடிப்படையில் பார்த்தால் தனியார் துறையினர்
நல்ல பணம் பண்ண சூரிய மின்சாரம் புது வழியைத் திறந்து விட்டுள்ளது. அந்த வகையில்
தனியார் துறையினருக்கு நல்ல மகிழ்ச்சி. மாநில அரசுகளின் மின்சார வாரியங்களுக்கும்
மகிழ்ச்சிதான். மக்கள் தாங்களே மின்சாரத்தை தயாரித்துக் கொள்ளும் போது மின்சார
வாரியங்கள் மீதான சுமை குறையத்தான் செய்யும். அந்த அளவில் மின் வாரியங்கள்
சந்தோஷப்படத்தானே செய்யும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக