சனி, 19 ஜனவரி, 2013

குளிர்சாதனைப்பெட்டி

ஒருமுறை வாங்கி, பல முறை பயன்படுத்தப்படும் பொருள் ஃப்ரிட்ஜ் என்ற ரெஃப்ரிஜிரேட்டர். எந்தெந்த பிராண்டுகளில் என்னென்ன வகை ஃப்ரிட்ஜுகள் கிடைக்கின்றன? விலை என்ன? எப்படிப் பராமரிப்பது?… இதோ உங்களுக்கான வழிகாட்டி! 

வெர்ல்பூல், எல்.ஜி., சாம்ஸங், காத்ரேஜ், கெல்வினேட்டர், வீடியோகான், எலெக்ட்ரோலக்ஸ், ஹேயர்… இப்படி ஏகப்பட்ட பிராண்ட்… 180 லிட்டரிலிருந்து 400 லிட்டர் வரை கொள்ளளவு கொண்ட விதம்விதமான ஃப்ரிட்ஜுகள் மார்க்கெட்டில் உள்ளன. 4 பேர் கொண்ட குடும்பத்துக்கு 180 லிட்டர் கொள்ளளவைத் தாங்கும் ஃப்ரிட்ஜ் போதுமானது.
பிராண்டுகளும் விலைகளும் தோராயமாக… (180 லிட்டர்)

எல்.ஜி. ரூ.11,000
சாம்ஸங் ரூ.10,800
வெர்ல்பூல் ரூ.11,500
கெல்வினேட்டர் ரூ.9,500
வீடியோகான் ரூ.9,000
எலெக்ட்ரோலக்ஸ் ரூ.9,850
ஹேயர் ரூ. 9,450
காத்ரேஜ் ரூ.9,500

டைரக்ட் கூலிங் வசதியுள்ள சிங்கிள் டோர், ஃப்ராஸ்ட் ஃப்ரீ வசதி கொண்ட டபுள் டோர், ட்ரிபிள் டோர், பல வசதிகள் கொண்ட சைடு பை சைடு டோர்… இப்படி பல வகைகளிலிருந்து நம் தேவை, பயன்பாட்டுக்கு ஏற்ப தேர்ந்தெடுக்கலாம். இதே போல 190, 195, 200 லிட்டர் அளவுகளிலும் ஃப்ரிட்ஜுகள் கிடைக்கின்றன.

கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் ‘ஸ்டார் ரேட்டிங்’. மின்சாரம் பயன்படுத்தும் பொருட்களில் நல்ல ஸ்டார் ரேட்டிங் இருந்தால் அது மின்சாரச் செலவைக் குறைக்கும் என்று அர்த்தம். ஃப்ரிட்ஜுகளில் வகைக்கு ஏற்ப, ஒன்றிலிருந்து 5 வரை ஸ்டார் இருக்கும்.

ஐஸ் அதிகம் தேவைப்படுபவர்களுக்காக வெர்ல்பூல் பிராண்டில் ‘ஐஸ் மேஜிக் ஃப்ரிட்ஜ்’ இருக்கிறது. சிங்கிள் டோர் வசதி கொண்ட இந்த ஃப்ரிட்ஜை நாம்தான் சுத்தம் செய்ய வேண்டும். ஆட்டோமேட்டிக்காக தானே க்ளீன் செய்து கொள்ளும் வகையில் அதே வெர்ல்பூல் பிராண்டில் ‘ஐ-மேஜிக்’ ஃப்ரிட்ஜ் புதிதாக வந்திருக்கிறது. இதன் விலை ரூ.13,500. சிங்கிள் டோர் ஃப்ரிட்ஜுகளைப் பொறுத்தவரை ஃப்ரீசரும் உள்ளேயே இருப்பதால் சுத்தமாக வைத்திருப்பது அதற்கு நீண்ட ஆயுளைக் கொடுக்கும்.

6 முதல் 8 பேர் கொண்ட குடும்பத்துக்கு 230 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஃப்ரிட்ஜ் தேவைப்படும். டபுள் டோர் வசதி கொண்ட இந்த வகைகளில் ‘ஆட்டோமேடிக் க்ளீன்’ வசதி இருக்கிறது.

பிராண்டுகளும் விலைகளும் தோராயமாக… (230 லிட்டர்)

எல்.ஜி. ரூ.15,350
சாம்சங் ரூ.16,250
காத்ரேஜ் ரூ.15,850
வெர்ல்பூல் ரூ.16,500

டபுள் டோர்களில் 245, 255, 260 லிட்டர் கொள்ளளவுகளில் கிடைக்கின்றன. 3 கதவுகள் கொண்ட ஃப்ரிட்ஜ் வகைகளில் காய்கறிகளை ஸ்டோர் செய்யும் வசதியும், தனியாக ஃப்ரீசரும் இருக்கும். வெர்ல்பூல், ஹிட்டாச்சி பிராண்டுகளில் இந்த வகை ஃப்ரிட்ஜுகள் கிடைக்கின்றன. 20 ஆயிரம் ரூபாயிலிருந்து தொடங்குகிறது விலை.

ஸ்டோரேஜ் வசதி அதிகம் தேவைப்படுபவர்களுக்காகவே பிரத்யேகமாக பெரிய சைஸ் கதவுகளோடு, கிராண்ட் லுக் தரும் ஃப்ரிட்ஜுகள் எல்.ஜி.யில் கிடைக்கும். விலை ரூ.50 ஆயிரம் ரூபாய்க்கும் மேல். எல்.ஜி. பிராண்டில் நவீன வசதிகளுடன் கூடிய பிரமாண்டமான ஃப்ரிட்ஜ் அறிமுகமாகி இருக்கிறது. லிநி நிசி வி237 கிநிழிழி என்கிற இந்த மாடலில் வொண்டர் டோர் சீரிஸ், 679 லிட்டர் கொள்ளளவு வசதி, ஐஸ்கட்டிகளை சீக்கிரம் உருவாக்கும் வசதி என பல சிறப்பம்சங்கள். உள்புறம் 52 லிட்டர் அளவுகளில் தனித்தனி அறைகள்.

இதன் காரணமாக, ஃப்ரிட்ஜின் மெயின் டோரைத் திறக்காமல், குறிப்பிட்ட அறையில் இருந்து தேவைப்படும் பொருளை மட்டும் எடுத்துக் கொள்ளலாம். நவீன வசதிகள் ஒருபுறம் இருந்தாலும், ஹெல்த் கார்டு டெக்னாலஜியின் அடிப்படையில் காற்றை சுத்தப்படுத்தும் வசதி உள்ளது. இதைப் பயன்படுத்தி உட்புறம் இருக்கும் தேவையில்லாத தூசுகள், பூஞ்சைகள், பாக்டீரியாக்கள், துர்நாற்றம் எல்லாவற்றையும் விரட்டி உணவுப் பொருட்களை பாதுகாப்பாக வைத்திருக்கலாம். சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த ஃப்ரிட்ஜில் காய்கறி, பழங்கள் வைப்பதற்கென தனித்தனி அறைகள், ஆட்டோமேடிக் ஃப்ரீசர் வசதியும் இருக்கின்றன.

பவர்கட் நேரத்தில் இந்த ஃப்ரிட்ஜை இயக்குவதற்கென ஸ்பெஷல் இன்வெர்ட்டர் 10 வருட உத்தரவாதத்துடன் கிடைக்கிறது. இது, கூட்டுக் குடும்பத்தினருக்கும் புதுமை விரும்பிகளுக்கும் சரியான சாய்ஸ். விலை ரூ.1.25 லட்சம்.

ஒரு ஃப்ரிட்ஜ் நீண்டநாள் உழைக்க வேண்டுமானால் அதை எப்படிப் பராமரிக்க வேண்டும்? விளக்குகிறார் ஃப்ரிட்ஜ் மெக்கானிக் சுந்தரம்.

ஃப்ரிட்ஜ் வாங்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்களில் ஒன்று ஸ்டெபிலைஸர். தரமான, பிராண்டட் ஸ்டெபிலைஸர்களை பயன்படுத்துவது நல்லது. ஃப்ரிட்ஜில், ஃப்ரீசர் கதவுக்குப் பின்னால் என்னென்ன பொருட்களைப் பயன்படுத்தக்கூடாது என்பதையும் பயன்படுத்தும் வழிமுறைகளையும் எழுதி வைத்திருப்பார்கள். முதலில் அதைத் தெளிவாகப் படித்து, அதில் குறிப்பிட்டிருக்கும்படி பயன்படுத்த வேண்டும்.  ஃப்ரீசரில் வைத்திருக்கும் பொருட்கள் நன்றாக உறைந்துவிட்டால் அவற்றை எடுப்பதற்குக் கூரான ஆயுதங்களைப் பயன்படுத்தக் கூடாது. அது அமைந்திருக்கும் பிளாஸ்டிக் டப்பாவில் அலுமினியம் காயில் பொருத்தப்பட்டிருக்கும். கூரான பொருட்களைப் பயன்படுத்தினால், காயில் மீது பட்டு உள்ளிருக்கும் கேஸ் வெளியேறிவிடும். அதனால் விபத்து ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது. ஃப்ரிட்ஜ் ரிப்பேரானாலோ, தொடர்ந்து மின்சாரம் தடைப்பட்டாலோ உள்ளே இருக்கும் பொருட்களை வெளியில் எடுத்துவிடுங்கள். அடிக்கடி தடைப்படும் மின்சாரத்தால் உள்ளே இருக்கும் பொருட்கள் சீக்கிரமே அழுகி துர்நாற்றம் வீசத் தொடங்கிவிடும். இது போன்ற பாதிப்புகள் ஏற்பட்டால், ஃப்ரிட்ஜை நன்றாகத் துடைத்து, எலுமிச்சைப் பழத்தை வெட்டி உள்ளே ஆங்காங்கே வைத்து விடவேண்டும். அதனால் துர்நாற்றம் மறையும். கிருமிகளின் பாதிப்பும் இருக்காது. 

ஃப்ரீசரில் இருந்து உறைந்த பொருட்களை எடுக்கும்போது டீஃப்ராஸ்ட் பட்டனை அழுத்த வேண்டும். அப்படி அழுத்தும் போது ஃப்ரிட்ஜில் அதிகப்படியாக இருக்கும் ஐஸ் கரைந்து, அதற்குப் பின்னால் உள்ள டிரேயில் விழுந்து விடும். 2 மாதங்களுக்கு ஒரு முறை டீஃப்ராஸ்ட் செய்தால், ஃப்ரிட்ஜ் பழுதாகாமல் நீண்ட நாள் உழைக்கும். ஃப்ரிட்ஜை ஒரு தடவை ‘ஆஃப்’ செய்தால், உடனடியாக ‘ஆன்’ செய்யக் கூடாது. பேக்கிங் சோடா, காபித்தூளை ஃப்ரிட்ஜின் உட்புறம் வைத்தால் துர்நாற்றம் ஓடிவிடும். கேஸ்கட்டை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். வாங்கிய நாலைந்து வருடங்களில் உள்ளே பொருத்தப்பட்டிருக்கும் கேஸ்கட் சற்று தளர்ந்துவிடும். இதனால் உட்புறம் இருக்கும் குளிர்ந்த காற்று வெளியேறிவிடும். பாக்டீரியாக்கள் உள்ளிட்ட கிருமிகள் கதவில் ஏற்பட்டிருக்கும் இடுக்கு வழியாக உள்ளே போய், கொஞ்சம் கொஞ்சமாக உணவுப் பொருட்களையும் பாதித்துவிடும். எனவே, கேஸ்கட்டை சரியாகப் பொருத்த வேண்டும். 

ஃப்ரிட்ஜை சுத்தம் செய்ய சாதாரண சோப்புத் தண்ணீரைப் பயன்படுத்தினால் போதும். அதனால் எந்த பாதிப்பும் ஏற்படாது. சுத்தம் செய்த பிறகு, உட்புற அறைகளை துணியைக் கொண்டு நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். வெளியூருக்குப் போகும் போது பொருட்களை எல்லாம் வெளியில் வைத்துவிட்டு, ஃப்ரிட்ஜை ஆஃப் செய்துவிடுவது நல்லது.

எந்த வகை ஃப்ரிட்ஜாக இருந்தாலும் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை நன்கு சுத்தம் செய்ய வேண்டும். இடம் இருக்கிறது என்பதற்காக அளவுக்கு அதிக பொருட்களைத் திணிக்கக் கூடாது. ஒரு பொருளை எடுத்தால், உடனே ஃப்ரிட்ஜை மூடிவிட வேண்டும். இல்லையென்றால் உள்ளே இருக்கும் குளிர்ச்சி வெளியேறிவிடும். மறுபடியும் ஃப்ரிட்ஜைக் குளிர்விக்க அதிக மின்சாரம் தேவைப்படும்.

சுவருக்கும் ஃப்ரிட்ஜுக்கும் இடையில் குறைந்தது 6 இஞ்ச் தூரமாவது இடைவெளி இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். அப்போதுதான் அதிகம் சூடாகாமல் இருக்கும். உள்பக்கமாக இருந்து வரும் காற்று வெளியேறவும் வசதியாக இருக்கும். கீரை, காலிஃப்ளவர் போன்றவற்றில் புழுக்களும் பூச்சிகளும் இருக்க வாய்ப்பிருக்கிறது. அவை மற்ற உணவுப் பொருட்களையும் பாதித்துவிடும். எனவே, அவற்றை காகிதத்தில் சுற்றி வைப்பது நல்லது. ஃப்ரிட்ஜின் மேல் பகுதியில் பொருட்களை வைப்பதைத் தவிர்க்க வேண்டும். ஃப்ரிட்ஜ் வைக்கும்போதே எர்த் சரியாக உள்ளதா என்று எலெக்ட்ரீஷியனைக் கொண்டு பரிசோதித்துக் கொள்ள வேண்டும். 6 மாதங்களுக்கு ஒரு முறை மெக்கானிக்கை அழைத்து வந்து ஃப்ரிட்ஜை சர்வீஸ் செய்து, பழுதில்லாமல் சரியான நிலையில் வைத்திருக்க வேண்டும்.

மின்சாரத்தைச் சேமிப்பதற்கும் மின் வெட்டு சமயம் இருட்டைச் சமாளிப்பதற்குமான டிப்ஸ்கள் !!!!!

தவிர்க்கவே முடியாதது... தமிழகமும் மின் வெட்டும் என்றாகிவிட்டது!மின்சாரம் இருக்கும் நேரங்களில் அதை அதீதமாகச் செலவழிப்பது, மின் வெட்டு நேரத்தை இன்னும் அதிகரிக்கவே செய்யும். ஆகவே, மின் சிக்கனம் தேவை இக்கணம்.

டாஸ்க் லைட்டிங்’ எனும் முறையைப் பின்பற்றலாம். அதாவது, உங்கள் வேலைக்குத் தேவையான மின்சாரத்தை மட்டும் பயன்படுத்துங்கள். உதாரணமாக, படுக்கை அறையில் புத்தகம் படிக்கும் சமயம், மொத்த அறைக்குமான விளக்கை ஒளிரவிடாமல், டேபிள் லேம்ப்பை மட்டும் பயன்படுத்துவது.

செல்போன், லேப்டாப் போன்றவற்றை சார்ஜ் செய்தவுடன் அதன் ப்ளக்கை மின்சார இணைப்பில் இருந்து எடுத்துவிடுங்கள். என்னதான் சுவிட்சை ஆஃப் செய்தாலும், அதில் மின்சாரம் கடந்துகொண்டேதான் இருக்கும். அதனால் மின்சாரம் விரயமாவதுடன், மின் சாதனப் பொருட்களுக்குச் சேதமும் உண்டாகலாம்.

குளிர்சாதனப் பெட்டியின் 'கன்டென்சர் காயில்’-ஐ வாரம் ஒரு முறை சுத்தப்படுத்துங்கள். அதில் படியும் தூசி, குளிர்சாதனப் பெட்டியின் செயல்பாட்டுத் திறனைக் குறைத்து 25 சதவிகிதத்துக்கும் அதிகமான மின்சாரத்தை எடுத்துக்கொள்ளும்.

மேஜை விளக்கினை அறையின் ஓரத்தில் வைக்கவும். அதனால், விளக்கின் ஒளி இருபுறச் சுவர்களிலும் பட்டு பிரகாசமாகப் பிரதிபலிக்கும்.

வீட்டு உபயோகத்துக்கு என்றால், 'டெஸ்க்டாப்’ கணினியைவிட லேப்டாப்பே சிறந்தது. லேப்டாப் கணினியைவிட டெஸ்க்டாப் கணினி ஐந்து மடங்கு அதிகமான மின்சாரத்தை உட்கொள்ளும். ஒருவேளை டெஸ்க்டாப் கணினி வாங்கினாலும், அதற்கு எல்.சி.டி. மானிட்டரையே தேர்ந்தெடுங்கள்.

கணினியில் ஸ்க்ரீன்சேவர்கள் வைத்தால், மின்சாரப் பயன்பாடு குறையும் என்பது தவறு. பயன்பாடு இல்லாத நேரத்தில், மானிட்டரை அணைத்துவிடுவதே சிறந்தது.

வாஷிங் மெஷினின் அதிகபட்சக் கொள்ளவுக்குத் துணிகளை நிரப்புங்கள்.

ப்ரிஜ்ஜின் குளிர்நிலையை 37 டிகிரி முதல் 40 டிகிரிக்குள் செட் செய்துகொள்ளுங்கள்.

திரவப் பொருட்களை மூடிவைத்து பிறகு ஃப்ரிஜ்ஜுக்குள் வைக்கவும். திறந்துவைத்தால், ஃப்ரிஜ்ஜுக்குள் ஈரப்பதம் அதிகமாகும். அதனால், அதிக வேலைப் பளு காரணமாக மின்சாரம் கூடுதலாகச் செலவாகும்.

டிஸ்போஸபிள் பேட்டரிகளைவிட ரீ-சார்ஜ் வசதியுள்ள பேட்டரிகளைப் பயன்படுத்தலாம்.
மின் வெட்டு சமயங்களைச் சமாளிக்க, சந்தையில் என்னவெல்லாம் பொருட்கள் கிடைக்கின்றன...

எமர்ஜென்ஸி ஃபேன்:

டூ இன் ஒன் அல்லது த்ரீ இன் ஒன் ஆகக் கிடைக்கிறது இந்த எமர்ஜென்ஸி ஃபேன். எமர்ஜென்ஸி விளக்கும் ஃபேனும் பொருத்தப்பட்டு இருக்கும் சாதனத்தின் விலை 650 முதல் 800 வரை. ஃபேன், விளக்கு மற்றும் எஃப்.எம். ரேடியோ ஆகியவை இணைந்த சாதனம் 1,000 முதல் 1,200 வரை. சார்ஜ் செய்துகொண்டு மின்சாரம் இல்லாத சமயங்களில் இவற்றைப் பயன்படுத்திக்கொள்ளலாம். இந்தச் சாதனங்களை முழுமையாக சார்ஜ் ஏற்றிக்கொண்ட பிறகு, ஃபேன், விளக்கு, எஃப்.எம். இவற்றில் ஏதேனும் ஒன்றை மட்டும் பயன்படுத்தினால், நான்கு முதல் ஆறு மணி நேரம் வரை இயங்கும். மூன்றையும் ஒரே நேரத்தில் பயன்படுத்தினால் ஒரு மணி நேரம் மட்டுமே சார்ஜ் நிற்கும்.

மொபைல் பவர் பேக்-அப்:
மின் வெட்டு சமயம் உங்கள் அலைபேசியை சார்ஜ் ஏற்றிக்கொள்ள உதவும் சாதனம் இது. மின்சாரம் இருக்கும் சமயம் இதை முழுக்க சார்ஜ் செய்துவிட வேண்டும். சுமார் மூன்று மணி நேரங்களில் இது சார்ஜ் ஆகிவிடும். பிறகு, மின்சாரம் இல்லாத சமயம் அலைபேசியில் இந்தச் சாதனம் மூலம் சார்ஜ் ஏற்றிக்கொள்ளலாம். இரண்டு அலைபேசிகளை இதன் மூலம் சார்ஜ் செய்துகொள்ள முடியும். இதன் விலை 1,600 முதல் 2,000 வரை!

மினி இன்வெர்ட்டர்:
வழக்கமான இன்வெர்ட்டரின் மினி வடிவம். இதன் மூலம் லேப்டாப் இயக்கம், மொபைல் சார்ஜ் ஆகியவற்றின் தேவைகளை நிவர்த்தி செய்துகொள்ள முடியும். இதன் விலை 2,500 முதல் 3,500 வரை.

சோலார் லேம்ப்:
வெயிலில் சார்ஜ் ஏற்றிக்கொண்டு இருளைப் போக்கும் விளக்குகள் இவை. போட்டோவால்டிக் சோலார் பேனல் மூலம் சார்ஜ் ஆகும் பேட்டரி இந்தச் சாதனத்தின் எல்.இ.டி. விளக்கை ஒளிரவைக்கும். சூரிய வெளிச்சம் படும் இடத்தில் வைத்துவிட்டால், இதன் சோலார் பேனல் சக்தியை உள்வாங்கிக்கொண்டு, மின் வெட்டு சமயங்களில் ஆபத்பாந்த வனாக ஒளி கொடுக்கும். முழுக்க சார்ஜ் ஏற்றிக்கொண்ட பிறகு இது சுமார் ஆறு மணி நேரம் வரை ஒளி கொடுக்கும். விலை 500 முதல் 800 வரை!

ஞாயிறு, 6 ஜனவரி, 2013

டிப்ஸ்:மைக்ரோவேவ் அவனை உபயோகிக்கும் போது கவனிக்க வேண்டியவை...


மைக்ரோவேவ் சமையல் நன்றாக இருக்கும்தான். ஆனால் அதை மட்டுமே எதிர்பார்த்து நேரத்தை வீணடிக்காமல் சமையலறையில் உள்ள மற்ற உபகரணங்களையும் பயன்படுத்தப் பழகிக் கொண்டால் வேலை சுலபமாகவும் துரிதமாகவும் நடைபெறும். அதிலும் குறிப்பாக வேலைக்குச் செல்பவர்கள் இந்த முறையைக் கையாண்டு பார்க்கலாம்!

இரண்டு அல்லது 3 கப்புகளுக்கு மேல் தண்ணீரோ பாலோ சூடு பண்ண வேண்டுமானால், அதை அடுப்பில் ஒரு பாத்திரத்தில் வைத்தே சூடேற்றிவிடுங்கள். அவனைப் பயன்படுத்தத் தேவையில்லை.

எண்ணெய் சூடேற்றிப் பொரித்தெடுக்கும் (Deep fryling) சமையல் வகைகளை மைக்ரோ அவனில் செய்யக்கூடாது.

பெரிய அளவுகளில் சமையல் செய்யும்போது மைக்ரோ வேவ் அவனில் சமைப்பதைத் தவிர்த்திடுங்கள்.

இனிப்பு வகைகளை மைக்ரோவேவ் அவனில் சூடு பண்ணலாம். ஆனால் இனிப்பு வகைகளில் சில்வர் பாயில் (Silver foil) இருந்தால் அதை மைக்ரோவேவில் சூடு பண்ணக்கூடாது.

உபயோகிக்கும் போது கவனிக்க வேண்டியவை:

* மைக்ரோவேவ் ஓவன் சுலபமாக ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்துக்குக் கொண்டு செல்லக்கூடியது. இதனை ஒரு மேசை மேலோ, பெஞ்ச் மேலோ வைத்துக் கொள்ளலாம். மின்சார அல்லது கேஸ் அடுப்புக்கு மிக அருகில் வைக்கக்கூடாது. ஏனெனில் இவற்றிலிருந்து வரும் வெப்பமும் நீராவியும் மைக்ரோவேவ் அவனின் இயக்கத்திற்குத் தடையாக அமையலாம்.

* அவனின் மேல் காற்றோட்டம் இருக்க வேண்டும். ஒரு அலமாரியினுள்ளோ, மிகவும் நெருக்கமான இடத்திலோ மைக்ரோவேவ் அவனை வைக்கக்கூடாது.

* மைக்ரோவேவ் அவனில் குறைந்த அளவில் சமையல் செய்யும் போது மின்சார உபயோகம் அதிக அளவில் மிச்சப்படுத்தப்படுகிறது என்பதை கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.

* சமைக்கப்பட்ட உணவை ஒரு தட்டில் பரிமாறி சூடேற்றும்போது, ஒரு நிமிடமோ 2 நிமிடமோ சூடேற்றினாலே போதும்!

* சமைக்கப்பட்ட கறிவகைகள் சூடு பண்ணும்போதும் மூடியை உபயோகிக்க வேண்டும். ஆனால் இடையில் மூடியைத் திறந்து ஓரிரு தடவைகள் கிளறிவிட்டால் பரவலாக உணவு சூடேறும்.

* சில சமயங்களில் ப்ரீசரிலிருந்து எடுக்கப்படுகின்ற Frozen காய்கறி பாக்கெட்டுகள் பச்சைப் பட்டாணி, சோளம் பாக்கெட்டுகள் போன்றவை நேரடியாக மைக்ரோவேவில் டீபிராஸ்ட் பண்ணப்படும்போது, அந்தப் பாக்கெட்டுகளில் சிறு துளைகள் இடவேண்டும். இப்படிச் செய்யாது போனால் பாக்கெட் வெடித்துக் காய்கள் சிதற வாய்ப்புண்டு.

* சிறிய கழுத்து உள்ள பாட்டில்களில் உணவுப் பதார்த்தமோ பான வகைகளோ சூடேற்றக் கூடாது. ஓரளவு அகன்ற வாயுள்ள பாட்டில்களை உபயோகிக்கலாம். ஆனால் தொடர்ந்து அதிக நேரம் பாட்டில்களை சூடேற்றுவது அவ்வளவு நல்லதல்ல. அவை வெடிப்பதற்கு வாய்ப்புண்டு.

* சிறு குழந்தைகளுக்கான உணவு வகைகள் சூடேற்றும்போது அந்தப் பாட்டில் அல்லது பாக்கெட்டில் தரப்பட்டிருக்கின்ற சூடேற்றம் விளக்கங்களைச் சரிவரப் படித்த பின்னர் அதன்படி செய்ய வேண்டும். சூடேற்றிய உடனேயே அதைக் குழந்தைக்குக் கொடுத்துவிடாமல் அதன் வெப்பநிலை சரியாக இருக்கிறதா எனக் கைவிரல் வைத்துப் பார்த்த பின்னர் தான் கொடுக்க வேண்டும். அது போலவே குழந்தைகளின் பால் பாட்டில்களை பாலோடு சூடேற்றிக் கொடுக்கும் போதும் ஒரு சில துளிகள் நமது கையில் ஊற்றிப் பார்த்த பின்னரே கொடுக்க வேண்டும்.

* பெரியவர்களும் கூட மைக்ரோவேவ் அவனில் சமைத்த அல்லது சூடேற்றிய உணவுப் பொருள்களை இறக்கியவுடன் எடுத்து வாயில் போடக் கூடாது. முன்னர் கூறியது போல சமையல் முடிந்து மணி அடித்த பின்னரும் சில செகண்டுகளுக்கோ அல்லது ஓரிரு நிமிடங்களுக்கோ தொடர்ந்து கதிர்களின் தாக்கம் அதில் இருக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அதன் பிறகுதான் பயன்படுத்த வேண்டும்.

டிப்ஸ்:மின்சாரத்தை மிச்சப்படுத்த சில வழிமுறைகள்...

மின்தடை ஒரு பக்கம் படுத்துகிறது என்றால், பல குடும்பத் தலைவர்களை மின்சார பில்லும் பயமுறுத்துகிறது. அதிலும் வீட்டுக்கு ஓர் அளவாக இருக்கும் வாடகை வீட்டு பரிதாப மனிதர்களை. ஆனால் மின்சாரத்தைப் பயன்படுத்துவதில் கொஞ்சமே கொஞ்சம் கவனம் செலுத்தினால் போதும். இ.பி. பில் "இனிய அதிர்ச்சி" தரும்.

மின்சாரத்தை மிச்சம் பிடிப்பது எப்படி? இதோ வழிமுறைகள்...

டிப்ஸ்:உங்கள் வீட்டு ஃப்ரிட்ஜும், ஏ.ஸி.யும் மின்சாரத்தை அதிகம் இழுக்கிறதா?

உங்களுக்கொரு விஷயம் தெரியுமா? நார்மல் ஃபிரிட்ஜின் ஆயுட் காலம் 15 லிருந்து 20 வருடங்கள்தான்! அதற்குப் பின் அதை இயக்க செலவிடும் தொகை ஃப்ரிட்ஜை வாங்கும்போது தந்த பணத்தை விட பல மடங்கு அதிகமாக இருக்கும். அதனால் சும்மா கிடைக்கிறதே என்றுகூட பழைய ஃப்ரிட்ஜை வாங்கி விடாதீர்கள். அதேபோல் அளவில் சிறிய ஃபிரிட்ஜிக்குத் தேவையான கரண்ட், அளவில் பெரிய ஃபிரிட்ஜிக்குத் தேவையான கரண்ட்டை விட குறைவுதான். எனவே உங்கள் குடும்பத்தின் தேவைக்கு ஏற்ற அளவில் ஃபிரிட்ஜை தேர்ந்தெடுத்தால் கரண்ட்டை மிச்சப்படுத்தலாம்.

டிப்ஸ்:வாஷிங்மெஷினை சரியாக கையாள்வது எப்படி?

"சரியாக கையாளத் தெரிந்தால் வாஷிங்மெஷினைவிட ஈஸியான எலெக்ட்ரானிக் அயிட்டம் வேறெதுவும் இல்லை."
வாஷிங்மெஷின்.... உண்மையிலேயே நமக்கெல்லாம் வரப்பிரசாதம்தான். ஆனால், அதை வாங்குவதற்கு முன்பாக எது, எதையெல்லாம் அலசி ஆராய வேண்டும்..? வாங்கிய பிறகு, எப்படியெல்லாம் பராமரிக்கவேண்டும்...? என்பதைப் பற்றியெல்லாம் தெரிந்து கொண்டால்தான் அது வரப்பிரசாதமாக இருக்கும். இல்லையென்றால்... வம்புப் பிரசாதமாகி, "ஏண்டா வாங்கினோம்" என்று வாழ்க்கையே வெறுத்துவிடும்.

இந்த விஷயத்தில் நமக்கு உதவுவதற்காக வருகிறார் சுரமுத்து. இவர், சென்னையின் சில இடங்களில் இயங்கிவரும் "ஸ்ரீசர்வீஸஸ்" என்ற சர்வீஸ் சென்டரின் உரிமையாளர். வாஷிங்மெஷினை சரியாக கையாளத் தெரிந்தாலே போதும், அது...எந்தவித பிரச்சினையையும் கொடுக்காது. அதன்பிறகு, "இதைவிட ஈஸியான எலெக்ட்ரானிக் அயிட்டம் வேறெதுவும் இல்லை" என்று நீங்களே சொல்வீர்கள்!" என்று சிம்பிளாக அறிமுகம் கொடுத்தவர், டிப்ஸ்களை அடுக்கினார்.

எப்படித் தேர்ந்தெடுப்பது?

* புதிதாக வாஷிங்மெஷின் வாங்கும்போது அதில் எத்தனை வகை இருக்கிறது; அவற்றின் செயல்பாடுகள் எப்படியிருக்கும்; உங்கள் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை; நிதி நிலைமை; வீட்டில் தண்ணீர் வரத்து; இடவசதி என அனைத்தையும் தெரிந்து வைத்துக் கொண்டு அதற்கேற்ப வாஷிங்மெஷினைத் தேர்ந்தெடுங்கள்.

* வாஷிங்மெஷினில் அஜிடேட்டர், பல்சேட்டர், டம்பிள் என்று மூன்று வகைகள் உண்டு.

* அஜிடேட்டர் வகை மெஷினைத் திறந்தால் நடுவில் 'ராடு' போன்ற கருவி உயரமாக இருக்கும். இதுதான் துணிகளைத் திருப்பி, சுழற்றித் துவைக்கிறது. பல்சேட்டர் மெஷினில் இந்த வகை ராடு இல்லாமல், தட்டை வடிவ பிளாஸ்டிக்காலான தட்டு இருக்கும். இந்த இரண்டு வகை வாஷிங்மெஷின்களையும் டாப் லேடிங் (Top loading) வாஷிங்மெஷின் என்று அழைப்போம். இதில், மேல் பக்கக் கதவைத் திறந்து துணிகளை உள்ளே போட வேண்டாம். டம்பிள் வாஷிங்மெஷின் ஃப்ரன்ட் லோடிங் (Front loading) அதாவது, முன்பக்க கதவைத் திறந்து துணிகளைப் போடலாம்.

* அஜிடேட்டர் மற்றும் பல்சேட்டர் மெஷினில் செமிஆட்டோமேட்டிக் (Semi automatic) மற்றும் ஃபுல்லி ஆட்டோமேட்டிக் (Fully automatic) என்று இரண்டு வகை உண்டு. டம்பிள்வாஷ் வகை மெஷின்கள் மட்டும் ஃபுல்லி ஆட்டோமேட்டிக்காகத்தான் கிடைக்கின்றன. சூடான தண்ணீ­ரில் அலசக் கூடிய வசதிகளும் இதில் மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளன.

என்ன விலை மெஷினே?

* செமி ஆட்டோமேட்டிக் மெஷின்கள் 8,000 ரூபாயிலிருந்து கிடைக்கின்றன. ஃபுல்லி ஆட்டோமேட்டிக் மெஷின்கள் 13,000 ரூபாயிலிருந்தும், டம்பிள் மெஷின்கள் 20,000 ரூபாயிலிருந்தும் கிடைக்கின்றன.

* மெஷின்கள் 4 கே.ஜி., 5 கே.ஜி. முதல் 8 கே.ஜி. வரையிலான கொள்ளளவில் கிடைக்கின்றன. 4 கே.ஜி. என்றால், 4 கிலோ கிராம் அளவுக்கான உலர்ந்த துணிகளைத் துவைக்க முடியும். நான்கு பேர் கொண்ட குடும்பம் என்றால், 5 கே.ஜி. போதுமானது.

* மெஷினில் டியூப்பை, வீட்டிலிருக்கும் ஏதாவது ஒரு நல்ல தண்ணீர் குழாயுடன் இணைத்து விடுங்கள். செமி ஆட்டோமேட்டிக் என்றால், துணிகளைப் போட்டு, பவுடரையும் போட்டு, தண்ணீரைத் திறந்துவிட வேண்டும். பிறகு, 'சுவிட்ச் ஆன்' செய்ய வேண்டும்.

துவைத்த பிறகு, உரிய பட்டனைத் தட்டினால் அந்தத் தண்ணீர் வெளியேறிவிடும். பிறகு பட்டனை அழுத்தித் தண்ணீரை வெளியேற்றி, பைப்பை மீண்டும் திறந்து விட வேண்டும். இப்போது அலசுவதற்கான பட்டனைத் தட்டினால், அது அலசிக் கொடுக்கும். மீண்டும் ஒரு பட்டனைத் தட்டினால், அந்தத் தண்ணீரும் வெளியேறிவிடும். பிறகு, துணிகளை டிரையரில் போடவேண்டும். அதன் மீது, ஸ்பின்கேப் போட்டுவிட்டு, டிரையரின் கதவை மூட வேண்டும்.

ஃபுல்லி ஆட்டோமேட்டிக் என்றால்... துணிகளையும், தேவையான பவுடரையும் போட்டு விட்டு, தண்ணீர் அளவை கொடுத்திருக்கும் பட்டன் மூலம் செலக்ட் செய்துவிட்டால் போதும். அதுவே துவைத்து, அலசி, டிரையரில் பிழிந்து கொடுத்துவிடும்.

* மெஷினில் துணிகளைப் போடும்போது, துணிகளைவிட இரண்டு இன்ச் அளவுக்கு அதிகமாக தண்ணீர் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். அப்போதுதான் துணிகளை நன்கு துவைக்கும்.

* உங்கள் வீட்டுக்குழாயில் உப்பு தண்ணீர்தான் என்றாலோ... குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே தண்­ணீர் வரும் என்றாலோ... செமி ஆட்டோமெடிக் மெஷினை வாங்கலாம். சில சமயம் பைப்பில் தண்ணீர் வரவில்லையென்றாலும்கூட, நேரடியாக தண்ணீர் ஊற்றும் வசதி இந்த வகை மெஷின்களில் உண்டு. தண்ணீர் வரத்து பைப்பில் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும் என்றால் மட்டுமே ஃபுல்லி ஆட்டோமெடிக் வாஷிங்மெஷினை வாங்குங்கள்.

* பொதுவாக எந்தவகை வாஷிங் மெஷினாக இருந்தாலும், அதில் இருக்கும் டிரையர், எண்பது சதவிகிதம்தான் துணியை உலர்த்தும், அதன்பிறகு கொடியில் சற்று நேரமாவது உலர்த்த வேண்டும்.

* என்னதான் மெஷினில் துவைத்தாலும், துணிகளில் சட்டை காலர், பேன்ட்டின் அடிப்பகுதிகளை நீங்கள் கைகளால் ஒரு முறை நன்றாக கசக்க வேண்டும்.

* பெட்ஷீட், ஜீன்ஸ், உல்லன், பாலியஸ்டர், காட்டன் என்று துணிகளின் தன்மைக்கு ஏற்ப பார்த்துத் துவைக்கும் வசதிகள் கொண்ட மெஷின்களும் வந்துவிட்டன. இவற்றைத் தேர்ந்தெடுத்தால், உங்களின் துணிகள் சேதமடையாமல் இருக்கும்.

* வாஷிங்மெஷின்கள் அதிகமாக மின்சாரத்தை இழுக்காது. தினமும் இரண்டரை மணி நேரம் ஓடினால் ஒரு யூனிட்தான் ஆகும். அதுவும் துவைக்கும்போது மோட்டார் ஓடுவது என்பது அரைமணி நேரம்தான்.

பயன்படுத்துவது எப்படி?

* பொதுவாக எல்லா மெஷின்களிலும் லின்ட்பில்டர் (lint filter) வசதி உருவாக்கப்பட்டிருக்கும். இது, துணிகளைத் துவைக்கும்போது ஷர்ட், பேன்ட், சேலையில் இருந்து வெளியேறும் நூல்களை எல்லாம் சேகரித்து, வடிகட்டி வைத்திருக்கும். இந்த ஃபில்டர், பார்க்கச் சின்னக் குழந்தைகளின் கால் சாக்ஸ் போலத் தெரியும். ஒவ்வொரு முறை துவைத்ததும் இந்த ஃபில்டரை சுத்தம் செய்ய வேண்டும். ஃபில்டர் துணி கிழிந்துவிட்டால், குழந்தைகளின் சாக்ஸை எடுத்து அதில் மாட்டி விட்டுவிடுவார்கள். அப்படிச் செய்யாமல் உரிய சர்வீஸ் ஆட்களை அழைப்பதுதான் நல்லது.

* மெஷினுக்கு வெளியே இன்லெட் வால் ஃபில்டர் என்றொரு வடிகட்டி அமைக்கப்பட்டிருக்கும். இது தண்ரில் இருந்துவரும் அழுக்குகளை எல்லாம் வடிகட்டி, சுத்தமான தண்ணீரை மெஷினுக்குள் அனுப்புகிறது. குறைந்தபட்சம் மாதம் ஒரு முறை இந்த ஃபில்டரையும் சுத்தம் செய்து விடுங்கள்.

* சுவிட்ச் போர்டில் இருந்து நேரடியாகத்தான் மெஷினுக்குக் கனெக்ஷன் கொடுக்கவேண்டும். எக்காரணம் கொண்டும் எக்ஸ்டன்ஷன் பாக்ஸ் பயன்படுத்தாதீர்கள். இதனால், சரியாக எர்த் கிடைக்காமல் போகும். தேவையான எர்த் சரியாக இருக்கிறதா என்று எலெக்ட்ரிஷியன் மூலம் பரிசோதித்து விடுங்கள். அது, சரியாக இல்லையென்றால் ஷாக் அடிப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது.

* வெள்ளைத் துணிகளையும், கலர் துணிகளையும் ஒன்றாகத் துவைக்காதீர்கள். இதனால், வெள்ளைத் துணிகள் நாளடைவில் தன்னுடைய தரத்தை இழந்துவிடும்.

* சொட்டு நீலம் (லிக்விட் ப்ளூ) வாங்கும்போது அது டை பேஸ்டு (Dye based) நீலமா என்று பார்த்து வாங்குங்கள். பவுடர் பேஸ்டு (power based) பயன்படுத்தும்போது, சரியாகக் கரையாமல் துணிகளில் ப்ளூ கலர் கறை படிந்து விடக்கூடும்.

* உங்கள் வீட்டில் பைப் கோளாறு ஏற்பட்டால், ஃபுல்லி ஆட்டோமெட்டிக் மெஷினாக இருந்தாலும் செமி ஆட்டோமெடிக் போல பயன்படுத்த முடியும். என்றாலும், அது ஒரு ஆப்ஷன்தான். இதையே தொடர்ந்து பயன்படுத்தத் தேவையில்லை.

இந்த மெஷினில் தண்ணீரை வெளியே இருந்து எடுத்து ஊற்றித் துவைக்கும்போது மேல்புறத்தில் இருக்கும் சுவிட்ச்களின் மேல் தண்ணீர் படக்கூடாது. ஏனென்றால் அந்த இடத்தில்தான் எலெக்ட்ரானிக் அயிட்டங்கள் இருக்கும். அதில் தண்ணீர் படும்போது, சரியாக வேலை செய்யாமல், செயலிழந்து, செலவு வைத்து விடும். எனவே, அந்த இடத்தில் டவல் அல்லது கடினமான துணியைப் போட்டு மூடிவிட்டு உபயோகியுங்கள்.

* வாஷிங்மெஷினை பாத்ரூமில் வைக்காதீர்கள். வெகு சீக்கிரத்தில துருப்பிடிக்க வாய்ப்பிருக்கிறது. அதிகம் வெயில் படக்கூடிய இடங்களிலும் வைக்காதீர்கள்.

* வாஷிங்மெஷின் வாங்கி இரண்டு வருடம் ஆகிவிட்டால் உடனடியாக சர்வீஸ் செய்து விடுங்கள்.

* துணிகளின் கொள்ளளவுக்கு ஏற்ப, தானே தண்ணீரை செலக்ட் செய்து கொள்ளும் டெக்னிக்குக்கு 'ஃபஸ்ஸி லாஜிக்' (Fuzzy logic) என்று பெயர். மெஷினின் உள்ளே வரும் தண்ணீரின் அடர்த்தி, இரண்டையும் பரிசோதித்து, துணிகள் முழுவதும் துவைக்கப்பட்டு விட்டதா என்று கண்டறியும் டெக்னாலஜிக்கு 'நியூரோ ஃபஸ்ஸி' (Neuro fuzzy) என்று பெயர். இந்த வசதிகள் எல்லாம் ஃபுல்லி ஆட்டோமேட்டிக் மெஷின்களில் கிடைக்கும்.

* சாஃப்டான துணிகளை அலசும்போது அதற்கென பிரத்யோகமாக விற்கப்படும் சாஃப்ட்னர்களை வாங்கி உபயோகப்படுத்துங்கள். ஃபுல்லி ஆட்டோமேடிக் மெஷின்களில் இதற்கென தனியாக ஒரு பாக்ஸ் கொடுத்திருப்பார்கள். அதில், ஊற்றி வைத்துவிட்டு பட்டனை ஆன் செய்தால், தானாக எடுத்து உபயோகிக்க ஆரம்பித்துவிடும்.

துவைச்சு, தூள் கிளப்புங்க!

டிப்ஸ்:சுத்தம் எப்பவும் நல்லது!

ஒல்லிக்குத்தான் மவுசு!

மின்சாரம் வந்த புதுசில் பயன்படுத்தப்பட்ட குண்டு பல்புகளையே இப்போதும் பயன் படுத்தி வருகிறோம். கேட்டால் குண்டு பல்புக்கு குறைந்த மின்சாரம் போதும் என்கிறோம். குண்டு பல்புக்கு பதிலா குறுகிய குழல் விளக்குகளை பயன்படுத்தலாம். குண்டு பல்பைவிட இந்த விளக்குகளில் 40 சதவீதம் மின்சாரம் மிச்சம்! குண்டு பல்பைவிட விலை கூடுதலாக இருந்தாலும் அதற்கேற்ப நீண்ட நாளைக்கு தாக்கு பிடிக்கும்.

ஏசியை எப்படிப் பராமரிப்பது?

ஏசியை எப்படிப் பராமரிப்பது? ஏர் கூலர் எப்படி? என்ன பிராண்ட்? என்ன விலை? (AC & Air Cooler)

ஏசியை சரியாகப் பராமரிக்காவிட்டால் நீண்ட நாள் உழைக்காது. அதோடு, குறைந்த மின் அழுத்தம் ஏற்பட்டு தீ விபத்து ஏற்படுவதற்கும் வாய்ப்பு ருக்கிறது. முறையாகப் பராமரிக்காத ஏசி அதிகம் செலவு வைக்கும். எப்படிப் பராமரிப்பது என்பதை விளக்குகிறார் ஏசி மெக்கானிக் இஜாஸ் அகமது. மாதம் ஒருமுறையாவது ஏசியை சர்வீஸ் செய்யவேண்டும். அதிகமான புகை, புழுதி உள்ள இடங்களில் வசிப்பவர்கள் குறைந்தது மாதத்துக்கு 2 முறை சர்வீஸ் செய்யவேண்டும். அதிக தூசி ஏசியில் சேர்ந்தால் பாதிப்பு நமக்குத்தான். எனவே, ஏசியில் உள்ள ஃபில்டரை சுத்தப்படுத்த சர்வீஸ் செய்வது அவசியம். அதிகம் பயன்படுத்தாத காலகட்டத்தில்கூட சர்வீஸ் செய்து வைப்பது ஏசியின் வாழ்நாளைக் கூட்டும்.