ஞாயிறு, 6 ஜனவரி, 2013

டிப்ஸ்:மின்சாரத்தை மிச்சப்படுத்த சில வழிமுறைகள்...

மின்தடை ஒரு பக்கம் படுத்துகிறது என்றால், பல குடும்பத் தலைவர்களை மின்சார பில்லும் பயமுறுத்துகிறது. அதிலும் வீட்டுக்கு ஓர் அளவாக இருக்கும் வாடகை வீட்டு பரிதாப மனிதர்களை. ஆனால் மின்சாரத்தைப் பயன்படுத்துவதில் கொஞ்சமே கொஞ்சம் கவனம் செலுத்தினால் போதும். இ.பி. பில் "இனிய அதிர்ச்சி" தரும்.

மின்சாரத்தை மிச்சம் பிடிப்பது எப்படி? இதோ வழிமுறைகள்...


வீட்டில் அதிக மின்சாரத்தைச் சாப்பிடுபவை ஃப்ரிஜ், எலக்ட்ரிக் கீசர், மைக்ரோவேவ் ஓவன், ஏர்கண்டிஷனர் போன்றவை.

24 மணி நேரமும் ஓடிக் கொண்டே இருக்கும் ஃப்ரிஜ், இ.பி. பில்லில் 10 சதவீதத்துக்குக் காரணமாகிறது.

ஹீட்டர்:

* ஹீட்டர் டேங்க் நன்றாக "இன்சுலேஷன்" செய்யப்பட்டிருக்க வேண்டும். வெந்நீர் உள்ள நிலையில் டேங்கின் வெளி வெப்ப நிலையைப் பாருங்கள். அது சாதாரண அறை வெப்பநிலையில் இருந்தால் டேங்க் நன்றாக இன்சுலேஷன் செய்யப்பட்டிருக்கிறது என்று அர்த்தம். அந்தந்தப் பருவத்துக்கு ஏற்றவாறு "தெர்மோஸ்டாட்"டை "செட்" செய்யுங்கள். 60 டிகிரி செல்சியஸ் என்பது பெரும்பாலானோருக்கு ஏற்றது.

* கீசரை தேர்வு செய்வதில் புத்திசாலித்தனமாக இருப்பது நல்லது. உடனடியாகச் சூடாகும் கீசர்கள் மிகவும் வசதியானவைதான். ஆனால் ஏராளமான மின்சக்தியை எடுத்துக்கொள்ளும். நவீன கியாஸ் கீசர்களை தேர்வு செய்துகொள்ளலாம். சூரிய சக்தி வாட்டர் ஹீட்டர்கள் சுற்றுச்சூழலுக்கு இயைந்தவையாக வெந்நீரை அளிக்கும். ஒரு கீசரை "ஆன்" செய்வது, 75 டியூப் லைட்களை எரிய விடுவதற்குச் சமம் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.

ஃப்ரிஜ்:

பெரும்பாலான ஃப்ரிஜ்களில் குளிர், அதிக குளிர், மிக அதிகமான குளிர் என்ற வகையில் "செட்டிங்" இருக்கும். ஆனால் ஃப்ரிஜுக்கு பிரீஸரிலும், மற்ற பிரிவுகளில் இயல்பான வெப்பநிலை எவ்வளவு என்று குறிப்பிடப்பட்டிருக்காது. ஃப்ரிஜ்ஜினுள் அதிகமான குளிரோ, குறைவான குளிரோ உள்ளே வைக்கப்படும் உணவுப்பொருட்களின் தரத்தைப் பாதிக்கும். ஒவ்வொரு கூடுதல் குளிர்ச்சிக்கும் 5 சதவீதம் கூடுதல் மின்சாரம் செலவாகும். பிரீசர் அல்லாத பகுதிகளில் 7 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை போதுமானது. ஃப்ரிஜ்ஜின் மின்சாரத்தைப் பயன்படுத்தும் திறனை அறிய இந்த வெப்பநிலை அளவை நாம் அளவிட வேண்டும்.

* பயன்படுத்தப் பயன்படுத்த ஃப்ரிஜ் கதவின் "காஸ்கெட்" தளர்வாகி, காற்றுக் கசிவுக்கு வழிவகுக்கலாம். கதவைச் சாத்தி இடையில் ஒரு காகிதத்தைச் செலுத்திப் பாருங்கள். காகிதத்தை எளிதாக நுழைத்து எடுக்க முடிந்தால் "காஸ்கெட்"டை மாற்ற வேண்டும் என்று அர்த்தம்.

* "பிராஸ்ட் பிரீ" இல்லாத ஃப்ரிஜ்களின் பின்புறத்தில் கம்பித்தடுப்பு இருக்கும். இதில் தூசி படியும். சிலந்தியும் வலை பின்னலாம். இது பிரிஜ்ஜின் மின்சக்தி பயன்படுத்தும் திறனைப் பாதிக்கும். சுவரிலிருந்து போதுமான இடைவெளி விட்டு ஃப்ரிஜை வைப்பதும் முக்கியம்.

ஏர்கண்டிஷனர்:

* சிலர் சிலவேளைகளில் ஒரே நேரத்தில் ஏ.சி.யையும் மின்விசிறியையும் பயன்படுத்துவார்கள். இதனால் ஏ.சி.யால் போதுமான அளவுக்குக் குளிர்விக்க முடியாது. மின்சாரம்தான் வீணாகும்.

* கதவுகள், ஜன்னல்களில் இடைவெளி இருந்தால் வெளி வெப்பக்காற்று உள்ளே வந்து, ஏ.சி. கடுமையாக வேலை செய்ய வேண்டியிருக்கும். மின்சக்தியும் கூடுதலாகச் செலவாகும்.

* ஏ.சி. அறையில் ஃப்ரிஜ் அல்லது அதிக வாட் விளக்குகள் இருப்பது மேலே குறிப்பிட்ட பாதிப்பையே ஏற்படுத்தும். ஏ.சி. வெப்பநிலை அளவு, வசதியான 24 டிகிரி செல்சியஸ் என்ற அளவுக்கு "செட்" செய்யப்பட வேண்டும்.

* ஏ.சி.யில் உள்ள "ஏர் பில்டரை" அவ்வப்போது சுத்தம் செய்ய வேண்டும். ஏ.சி.யைப் பயன்படுத்தாதபோது ஜன்னல்களைத் திறந்துவிட்டு வெளிக்காற்று உள்ளே வர அனுமதிக்க வேண்டும்.

விளக்குகள்:

* சாதாரண குண்டு பல்புகளுக்குப் பதில், வெண்ணிறத்தில் சுருள் சுருளாக உள்ள "சி.எப்.எல்." விளக்குகளைப் பயன்படுத்தலாம். இவை சற்று விலை அதிகம் என்றாலும் மின்சாரத்தைக் குறைவாகப் பயன்படுத்தும். குண்டுபல்புகளில் 8 முதல் 10 சதவீத மின்சாரம்தான் வெளிச்சமாக மாற்றப்படுகிறது. பாக்கி 90 சதவீத மின்சக்தி வெறும் வெப்பமாகத்தான் வீணாகிறது.

* விளக்கு வெளிச்சத்தைக் கூட்ட, குறைக்க உதவும் "டிம்மர்கள்" இருந்தால், தேவையான அளவுக்கு மட்டும் வெளிச்சத்தை வைத்து மின்சார செலவைக் கட்டுப்படுத்தலாம்.

* டியூப் லைட்களில் "எலக்ட்ரானிக் சோக்"குகளை பயன்படுத்தினால் மின்சக்தி பயன்பாட்டைக் குறைப்பதோடு, நல்ல வெளிச்சத்தையும் பெறலாம்.

வயர்கள்:

பழைய அல்லது ஒழுங்கற்ற "வயரிங்" காரணமாக மின்கசிவு ஏற்படக்கூடும். இதுவும் மின்சார பில் அளவைக் கூட்டும். வீட்டில் மின்கசிவு இருக்கிறதா என்று அறிய அனைத்து மின்சாதனங்களையும் விளக்குகளையும் அணைத்துவிட்டு மெயின் சுவிட்ச் மீட்டர் ஓடுகிறதா என்று பாருங்கள். அது ஓடினால் மின்கசிவு இருக்கிறது, கவனிக்க வேண்டும் என்று அர்த்தம்.

பழைய உபகரணங்கள்:

பலருக்குப் பழைய வீட்டு உபயோக உபகரணங்களை மாற்ற மனம் வராது. ஆனால் சந்தைக்குப் புதிதாக வந்திருக்கும் உபகரணங்கள் நவீனத் தொழில்நுட்பம் கொண்டவையாக, சுற்றுச்சூழலுக்கு இயைந்தவையாக, குறைவாக மின்சக்தியைப் பயன்படுத்தக்கூடியவையாக இருக்கும். இன்றைய "லேட்டஸ்ட்" ஃப்ரிஜ், 1980-ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட ஃப்ரிஜ்ஜை விட குறைவாகவே மின்சாரத்தை உபயோகிக்கும். எனவே பழையதை ஒதுக்கிவிட்டு புதிதாக வாங்குவதே புத்திசாலித்தனம்.

கருத்துகள் இல்லை: