சனி, 20 அக்டோபர், 2012

உங்கள் வீடுகளிலும் மின்சாரத்தை சேமிக்க...


மின்விளக்குகள்

நீங்கள் பாவிக்கும் மஞ்சள் ஒளி மின் குமிழ்களைத் தவிர்த்து வெள்ளொளி மின் குமிழ்களை உபயோகிக்கவும். வெளிச்சம் தேவையான நேரங்களில் மட்டுமே மின் விளக்குகளைப் பாவியுங்கள்! நீங்கள் செலுத்தும் மின் கட்டணமானது, மின் விளக்குகளின் எண்ணிக்கை, அவற்றின் வலு, அவை பாவிக்கப்படும் நேரம் ஆகியவற்றில் மட்டுமே தங்கியுள்ளது என்பதை நினைவில் வைத்திருங்கள்!

குளிர்சாதனப் பெட்டிகள்

குளிர்சாதனப் பெட்டியின் கதவைத் திறக்க முதல் ஒரு கணம் சிந்தியுங்கள். வெளியில் எடுக்க வேண்டிய பொருட்கள் எவை? உள்ளே வைக்க வேண்டிய பொருட்கள் எவை? எனத் தீர்மானித்த பின்னரே கதவைத் திறக்க வேண்டும்.

அடிக்கடி கதவைத் திறப்பதையும் தவிர்க்க வேண்டும். குளிர்சாதனப் பெட்டியில் ஏதாவது பழுதுகள் இருந்தால் உடனேயே திருத்திவிட வேண்டும்.

குளிர்சாதனப் பெட்டியைப் பொருட்களால் நிறைக்கக்கூடாது. சூரிய ஒளி நேரடியாகப்படும் இடங்களிலோ, வெப்பம் பிறப்பிக்கப்படும் இடங்களிலோ குளிர்சாதனப் பெட்டியை வைக்கக் கூடாது. அதேபோல் சூடான பொருட்களையும் குளிர்சாதனப் பெட்டியினுள் வைக்கக்கூடாது.

மின்னழுத்திகள்

அழுத்தப்படுவதற்குக் குறைந்தளவு வெப்பம் தேவைப்படும் ஆடைகளிலிருந்தே அழுத்த ஆரம்பிக்க வேண்டும். அதேபோல மின்னழுத்தியின் மின்னிணைப்பைத் துண்டித்த பின்னரும் அதன் வெப்பம் குறையும் வரை குறைந்தளவு வெப்பம் தேவைப்படும் ஆடைகளை அழுத்த வேண்டும்.

அடிக்கடி மின்னழுத்தியைப் பாவிக்காமல், ஒரே தடவையிலேயே பல ஆடைகளை அழுத்தப் பழக வேண்டும். மின்னழுத்தியை ஒருபோதும் நிலைக்குத்தாக வைக்கக் கூடாது. நீராவி அழுத்திகள் சிக்கனமானவையாகும்.

வெப்பத்தைத் தெறிப்படையச் செய்யக்கூடியதாக அழுத்தும் மேசைகளின் மேற்பரப்பு அமைய வேண்டும். ஆடைகளை அழுத்த முதல் அவசியம் அழுத்த வேண்டுமா எனச் சிந்தித்து தேவையாயின் மட்டுமே அழுத்த வேண்டும்.

தொலைக்காட்சிகளும் கணினிகளும்

பலர் தொலைக்காட்சி பார்த்து முடிந்தபின் தொலை இயக்கியால் அதன் இயக்கத்தை நிறுத்திவிடுவர். அவ்வாறு தொலைக்காட்சியின் இயக்கம் நிறுத்தப்படும் போது அதற்குத் தேவையான வலு 7.3 w ஆகும். அதாவது மாதாந்தம் 5.3 அலகுகள் மின்சாரம் தேவைப்படுகிறது-

ஆகையால் தொலைக்காட்சி பாவிக்கப்படாத சந்தர்ப்பங்களில் அதன் ஆளியைத் திறந்து மின்னிணைப்பைத் துண்டிப்பதன் மூலம் மின் சக்தியைச் சேமிக்கலாம்.

அதேபோன்ற செயற்பாட்டை (Standby) கணினியில் மேற்கொண்டால் கணினிக்குத் தேவையான வலு 60 w ஆகும். இதனால் மாதமொன்றிற்கு 43 அலகுகள் மின்சாரம் தேவைப்படுகிறது. கணினிப் பாவனையாளர்கள் இதை உணர்வதில்லையென்பதும் குறிப்பிடத்தக்கது.

மின் விசிறிகள்

சாதாரண மின் விசிறிகளைவிட மேசை மின் விசிறிகள் சிக்கனமானவை. முன்னர் பாவனையிலிருந்த மின் விசிறிகள் எவ்வளவு வேகமாகச் சுழன்றாலும் ஒரேயளவிலான மின்சாரத்தையே உள்ளெடுக்கும். ஆனால், தற்போது பாவனையிலிருப்பவை அவ்வாறானவையல்ல.

மின் விசிறிகளிற்காகச் செலவாகும் மின்சாரத்தைச் சேமிப்பதற்கான சிறந்த வழி, காற்றோட்டமான வீடுகளை அமைத்தலாகும். இல்லாத பட்சத்தில் காற்றுச் சீராக்கிகளைப் பயன்படுத்தியும் மின்சாரத்தைச் சேமிக்கலாம்.


மூலம் : மின்வலு எரிசக்தி அமைச்சின் இணையத்தளம்

இன்று மின்சாரத்தை சேமிக்க சில டிப்ஸ்கள்

தவிர்க்கவே முடியாதது... தமிழகமும் மின் வெட்டும் என்றாகிவிட்டது!மின்சாரம் இருக்கும் நேரங்களில் அதை அதீதமாகச் செலவழிப்பது, மின் வெட்டு நேரத்தை இன்னும் அதிகரிக்கவே செய்யும். ஆகவே, மின் சிக்கனம் தேவை இக்கணம்.

டாஸ்க் லைட்டிங்’ எனும் முறையைப் பின்பற்றலாம். அதாவது, உங்கள் வேலைக்குத் தேவையான மின்சாரத்தை மட்டும் பயன்படுத்துங்கள். உதாரணமாக, படுக்கை அறையில் புத்தகம் படிக்கும் சமயம், மொத்த அறைக்குமான விளக்கை ஒளிரவிடாமல், டேபிள் லேம்ப்பை மட்டும் பயன்படுத்துவது.

செல்போன், லேப்டாப் போன்றவற்றை சார்ஜ் செய்தவுடன் அதன் ப்ளக்கை மின்சார இணைப்பில் இருந்து எடுத்துவிடுங்கள். என்னதான் சுவிட்சை ஆஃப் செய்தாலும், அதில் மின்சாரம் கடந்துகொண்டேதான் இருக்கும். அதனால் மின்சாரம் விரயமாவதுடன், மின் சாதனப் பொருட்களுக்குச் சேதமும் உண்டாகலாம்.

குளிர்சாதனப் பெட்டியின் 'கன்டென்சர் காயில்’-ஐ வாரம் ஒரு முறை சுத்தப்படுத்துங்கள். அதில் படியும் தூசி, குளிர்சாதனப் பெட்டியின் செயல்பாட்டுத் திறனைக் குறைத்து 25 சதவிகிதத்துக்கும் அதிகமான மின்சாரத்தை எடுத்துக்கொள்ளும்.

மேஜை விளக்கினை அறையின் ஓரத்தில் வைக்கவும். அதனால், விளக்கின் ஒளி இருபுறச் சுவர்களிலும் பட்டு பிரகாசமாகப் பிரதிபலிக்கும்.

வீட்டு உபயோகத்துக்கு என்றால், 'டெஸ்க்டாப்’ கணினியைவிட லேப்டாப்பே சிறந்தது. லேப்டாப் கணினியைவிட டெஸ்க்டாப் கணினி ஐந்து மடங்கு அதிகமான மின்சாரத்தை உட்கொள்ளும். ஒருவேளை டெஸ்க்டாப் கணினி வாங்கினாலும், அதற்கு எல்.சி.டி. மானிட்டரையே தேர்ந்தெடுங்கள்.

கணினியில் ஸ்க்ரீன்சேவர்கள் வைத்தால், மின்சாரப் பயன்பாடு குறையும் என்பது தவறு. பயன்பாடு இல்லாத நேரத்தில், மானிட்டரை அணைத்துவிடுவதே சிறந்தது.

வாஷிங் மெஷினின் அதிகபட்சக் கொள்ளவுக்குத் துணிகளை நிரப்புங்கள்.

ப்ரிஜ்ஜின் குளிர்நிலையை 37 டிகிரி முதல் 40 டிகிரிக்குள் செட் செய்துகொள்ளுங்கள்.

திரவப் பொருட்களை மூடிவைத்து பிறகு ஃப்ரிஜ்ஜுக்குள் வைக்கவும். திறந்துவைத்தால், ஃப்ரிஜ்ஜுக்குள் ஈரப்பதம் அதிகமாகும். அதனால், அதிக வேலைப் பளு காரணமாக மின்சாரம் கூடுதலாகச் செலவாகும்.

டிஸ்போஸபிள் பேட்டரிகளைவிட ரீ-சார்ஜ் வசதியுள்ள பேட்டரிகளைப் பயன்படுத்தலாம்.

மின் வெட்டு சமயங்களைச் சமாளிக்க, சந்தையில் என்னவெல்லாம் பொருட்கள் கிடைக்கின்றன...

     எமர்ஜென்ஸி ஃபேன்: டூ இன் ஒன் அல்லது த்ரீ இன் ஒன் ஆகக் கிடைக்கிறது இந்த எமர்ஜென்ஸி ஃபேன். எமர்ஜென்ஸி விளக்கும் ஃபேனும் பொருத்தப்பட்டு இருக்கும் சாதனத்தின் விலை 650 முதல் 800 வரை. ஃபேன், விளக்கு மற்றும் எஃப்.எம். ரேடியோ ஆகியவை இணைந்த சாதனம் 1,000 முதல் 1,200 வரை. சார்ஜ் செய்துகொண்டு மின்சாரம் இல்லாத சமயங்களில் இவற்றைப் பயன்படுத்திக்கொள்ளலாம். இந்தச் சாதனங்களை முழுமையாக சார்ஜ் ஏற்றிக்கொண்ட பிறகு, ஃபேன், விளக்கு, எஃப்.எம். இவற்றில் ஏதேனும் ஒன்றை மட்டும் பயன்படுத்தினால், நான்கு முதல் ஆறு மணி நேரம் வரை இயங்கும். மூன்றையும் ஒரே நேரத்தில் பயன்படுத்தினால் ஒரு மணி நேரம் மட்டுமே சார்ஜ் நிற்கும்.

மொபைல் பவர் பேக்-அப்: மின் வெட்டு சமயம் உங்கள் அலைபேசியை சார்ஜ் ஏற்றிக்கொள்ள உதவும் சாதனம் இது. மின்சாரம் இருக்கும் சமயம் இதை முழுக்க சார்ஜ் செய்துவிட வேண்டும். சுமார் மூன்று மணி நேரங்களில் இது சார்ஜ் ஆகிவிடும். பிறகு, மின்சாரம் இல்லாத சமயம் அலைபேசியில் இந்தச் சாதனம் மூலம் சார்ஜ் ஏற்றிக்கொள்ளலாம். இரண்டு அலைபேசிகளை இதன் மூலம் சார்ஜ் செய்துகொள்ள முடியும். இதன் விலை 1,600 முதல் 2,000 வரை!

மினி இன்வெர்ட்டர்: வழக்கமான இன்வெர்ட்டரின் மினி வடிவம். இதன் மூலம் லேப்டாப் இயக்கம், மொபைல் சார்ஜ் ஆகியவற்றின் தேவைகளை நிவர்த்தி செய்துகொள்ள முடியும். இதன் விலை 2,500 முதல் 3,500 வரை.

சோலார் லேம்ப்: வெயிலில் சார்ஜ் ஏற்றிக்கொண்டு இருளைப் போக்கும் விளக்குகள் இவை. போட்டோவால்டிக் சோலார் பேனல் மூலம் சார்ஜ் ஆகும் பேட்டரி இந்தச் சாதனத்தின் எல்.இ.டி. விளக்கை ஒளிரவைக்கும். சூரிய வெளிச்சம் படும் இடத்தில் வைத்துவிட்டால், இதன் சோலார் பேனல் சக்தியை உள்வாங்கிக்கொண்டு, மின் வெட்டு சமயங்களில் ஆபத்பாந்த வனாக ஒளி கொடுக்கும். முழுக்க சார்ஜ் ஏற்றிக்கொண்ட பிறகு இது சுமார் ஆறு மணி நேரம் வரை ஒளி கொடுக்கும். விலை 500 முதல் 800 வரை

Thanks : விகடன்