சனி, 14 செப்டம்பர், 2013

வீட்டு உபயோகப் பொருட்களில் சிக்கனம்

சமீபத்தில் நண்பர் ஒருவரின் ‘புதுமனை புகும் விழா’ வுக்குச் சென்றிருந்தேன். “3 படுக்கை அறைகள் – with attached bath…… வீடு முழுவதும் சுமார் 100 மின்சார இணைப்புகள்… plug points,  மின்விளக்கு, மற்றும் மின் விசிறி வசதியுடன்…….நீங்கள் எங்கு உட்கார்ந்து வேண்டுமானாலும்  படிக்கலாம்; உங்கள் தலைக்கு மேல் மின் விளக்கு, மின் விசிறி இருக்கும். கைபேசியை சாரஜ் செய்யலாம்….”என்று பெருமையுடன் வீட்டைச்சுற்றி காண்பித்தார். 
நம் எல்லோருக்கும் சகல வசதிகளுடன் கூடிய வீடு என்பது பெரிய மகிழ்ச்சி தரும் விஷயம் தான். ஆனால் அத்தனை வசதிகளும் மின்சார கட்டணமாக நமக்கே திரும்பி வரும்போதுதான்  ஒவ்வொரு வசதிக்கும் நாம் கொடுக்கும் விலை என்ன என்று தெரியும். நாம் ஒவ்வொருவரும் நமது வருவாயில் 6% முதல் 12% வரை வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்குவதிலும், அவற்றை பராமரிப்பதிலும், அவற்றுக்கான கட்டணங்களை கட்டுவதற்கும் செலவிடுகிறோம். வாழ்க்கைத்தரம் உயர உயர இந்தச் செலவுகள் அதிகமாகிக்கொண்டே  போகிறது.

ஒரு காலத்தில் செல்வந்தர்கள் மட்டுமே உபயோகித்து வந்த பல பொருட்கள் இப்போது அத்யாவசியம் என்றாகிவிட்டது. மிக்ஸி, கிரைண்டர், பிரிட்ஜ் தவிர நாம் அன்றாடம் பயன் படுத்தும் பல பொருட்கள் மின்சாரம் சார்ந்த பொருட்களாகவே இருக்கின்றன. இப்பொருட்கள் இல்லை என்றால் எதுவுமே செய்ய முடியாது என்கிற நிலை இல்லை என்றாலும், கணவன் மனைவி இருவரும் சம்பாதிப்பதால், இந்தப் பொருட்களின் மீதான செலவுகளை பற்றி அதிகம் கவலைப் படுவதில்லை; மேலும் இந்தப் பொருட்களினால் வீட்டு வேலையையும் துரிதமாக முடிக்க முடிகிறது. இம்மாதிரி பொருட்கள் வேண்டாம் என்று சொல்ல முடியாது ஆனால் இவற்றை பயன்படுத்தும் போது சில சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதனால் மின்சார கட்டணத்தை சற்று குறைக்கலாம்.
மின்சார சேமிப்பு:
1.  சாதாரண பல்புகளுக்குப் பதிலாக Compact Fluroscent Bulb பயன்படுத்தலாம்:

  • இம்மாதிரியான பல்புகள் சாதாரண பல்புகளை விட 75% குறைந்த மின் சக்தியைப் பயன் படுத்துகின்றன. அதுமட்டுமல்ல; இவ்வகை பல்புகள் சாதாரண பல்புகளை விட 10 மடங்கு அதிக காலம் நீடித்து உழைக்கின்றன. அதனால் அடிக்கடி பல்புகளை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை. குறைந்த செலவில் நிறைந்த வெளிச்சத்தை கொடுக்கின்றன.
  • தேவையில்லாத மின்விளக்கு, மின்விசிறி முதலியவற்றை அணைக்கவும். குழந்தைகளுக்கும் இந்தப் பழக்கத்தை ஏற்படுத்துங்கள். இரவில் படுக்கப் போகும்போது வேண்டாத ப்ளக் ஸ்விட்ச்களை அணைக்கவும். கைபேசி சாரஜ் ஆனவுடன் ப்ளக் இணைப்பை துண்டிக்கவும். தற்போது கிடைக்கும் வாஷிங் மெஷின்கள் துணி துவைத்து முடித்தவுடனும், குடி நீர் கெட்டில், குளியலறை கெய்சர் ஆகியவை நீர் சுட்டவுடனும்  தாமாகவே அணைந்து விடுகின்றன என்றாலும் ப்ளக் இணைப்பை துண்டிப்பது நல்லது.
நீரை சேமிக்க வழிகள்:
  • மழை நீர் சேமிப்பு நம் வீட்டுக்கு மட்டுமல்ல; நாட்டுக்கும் நல்லது. நிலத்தடி நீரை அதிகரிக்கவும் உதவும்
  • குளிப்பதற்கு ஷவர் அல்லது பக்கெட் பயன்படுத்துங்கள். பாத்டப் குளியல் வாரத்திற்கு ஒரு நாள் என்று வைத்துக்கொள்ளலாம். கழிவறையில் ஃபளஷ் பயன்படுத்தும் போதும் கவனம் தேவை. அங்கும் சின்ன வாளியைப் பயன்படுத்தலாம்; தப்பில்லை.
  • சில வாஷிங் மெஷின்களில் ‘save water’ என்று இருக்கும். நிறைய துணிகள் துவைக்கும் போது அதைப் பயன்படுத்தலாம். இரண்டாவது முறை துவைத்தவுடன் வெளி வரும் நீரை வாசல் கழுவ பயன்படுத்தலாம். மிதியடிகள், கைப்பிடி துணிகளை முதல் முறை இந்தத் தண்ணீரில் துவைத்து கடைசியாக நல்ல தண்ணீரில் அலசலாம்.
  • கைபேசியில் கால் வெய்ட்டிங், காலர் டியூன், இணைய இணைப்பு முதலியவற்றை தவிர்ப்பது மாதாமாதம் கைபேசியின் கட்டணத்தை குறைக்க உதவும். உங்களுக்கு உதவும் வகையில் கைபேசி இணைப்பை (plan) தேர்ந்தெடுத்து கொள்ளவும்.
  • உங்கள் வீட்டு தொலைக்காட்சிக்கு கேபிள் இணைப்பை விட DTH (Direct to Home) இணைப்பு அதிக பயன் தரும். உங்களுக்கு வேண்டிய சானல்களைத் (package) தேர்ந்து எடுத்துக் கொள்ளலாம். DTH இல் ஒயர்லெஸ் மூலம் நிகழ்ச்சிகள் நேரடியாக சாட்டிலைட் வழியாக ஒளிபரப்பு ஆவதால் கேபிள் தேவைப் படுவதில்லை. நீங்கள் பார்க்கும் சானல்களுக்கு மட்டும் பணம் கொடுத்தால் போதும்.
சமையல் எரிவாயுவில் சிக்கனம்:
சமையல் எரிவாயுவின் விலையைப் பார்த்தால் பயமாக இருக்கிறது. சமைக்காமலோ, சாப்பிடாமலோ இருக்க முடியாதே!
இதோ சில சிக்கன டிப்ஸ்:

  • அகலமான பாத்திரங்களைப் பயன்படுத்தவும்.
  • சாம்பாரோ, ரசமோ கொதித்தவுடன் அடுப்பைக் குறைக்கவும். மிதமான சூட்டில் காய்கறிகளைச் சமைக்கும்போது அவற்றின் சத்துக்கள் அழிவதில்லை.
  • அடுப்பில் தீயின் நிறம் நீலமாக இருக்க வேண்டும். மஞ்சள் நிறத்தில் தீ இருப்பது பர்னர் சரியில்லை என்பதைக் காட்டுகிறது. அடுப்பை நல்ல நிலையில் வைத்திருப்பது எரிவாயு சேமிப்புக்கு உதவும்.
  • சிலிண்டரை பயன்படுத்தாத போது மூடி வைப்பது வாயுக் கசிவை குறைக்கும். இரவில் கட்டாயம் சிலிண்டரை மூடவும்.
  • சமைத்த உணவை மறுபடியும் சுட வைக்க மைக்ரோவேவ் அவனை (microwave oven) பயன்படுத்தவும். சுட்ட அப்பளத்தில் பொறித்த அப்பளத்தின் சுவை வேண்டுமா? அப்பளத்தின் மேல் சிறிது எண்ணெய் தடவி மைக்ரோ அவனில் வைத்து எடுங்கள்.
 சிறுதுளி பெருவெள்ளம்; சின்னச்சின்னதாக சேமிக்கலாம்; சிறுகக் கட்டி பெருக வாழலாம்.

கருத்துகள் இல்லை: