ஞாயிறு, 6 ஜனவரி, 2013

டிப்ஸ்:மைக்ரோவேவ் அவனை உபயோகிக்கும் போது கவனிக்க வேண்டியவை...


மைக்ரோவேவ் சமையல் நன்றாக இருக்கும்தான். ஆனால் அதை மட்டுமே எதிர்பார்த்து நேரத்தை வீணடிக்காமல் சமையலறையில் உள்ள மற்ற உபகரணங்களையும் பயன்படுத்தப் பழகிக் கொண்டால் வேலை சுலபமாகவும் துரிதமாகவும் நடைபெறும். அதிலும் குறிப்பாக வேலைக்குச் செல்பவர்கள் இந்த முறையைக் கையாண்டு பார்க்கலாம்!

இரண்டு அல்லது 3 கப்புகளுக்கு மேல் தண்ணீரோ பாலோ சூடு பண்ண வேண்டுமானால், அதை அடுப்பில் ஒரு பாத்திரத்தில் வைத்தே சூடேற்றிவிடுங்கள். அவனைப் பயன்படுத்தத் தேவையில்லை.

எண்ணெய் சூடேற்றிப் பொரித்தெடுக்கும் (Deep fryling) சமையல் வகைகளை மைக்ரோ அவனில் செய்யக்கூடாது.

பெரிய அளவுகளில் சமையல் செய்யும்போது மைக்ரோ வேவ் அவனில் சமைப்பதைத் தவிர்த்திடுங்கள்.

இனிப்பு வகைகளை மைக்ரோவேவ் அவனில் சூடு பண்ணலாம். ஆனால் இனிப்பு வகைகளில் சில்வர் பாயில் (Silver foil) இருந்தால் அதை மைக்ரோவேவில் சூடு பண்ணக்கூடாது.

உபயோகிக்கும் போது கவனிக்க வேண்டியவை:

* மைக்ரோவேவ் ஓவன் சுலபமாக ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்துக்குக் கொண்டு செல்லக்கூடியது. இதனை ஒரு மேசை மேலோ, பெஞ்ச் மேலோ வைத்துக் கொள்ளலாம். மின்சார அல்லது கேஸ் அடுப்புக்கு மிக அருகில் வைக்கக்கூடாது. ஏனெனில் இவற்றிலிருந்து வரும் வெப்பமும் நீராவியும் மைக்ரோவேவ் அவனின் இயக்கத்திற்குத் தடையாக அமையலாம்.

* அவனின் மேல் காற்றோட்டம் இருக்க வேண்டும். ஒரு அலமாரியினுள்ளோ, மிகவும் நெருக்கமான இடத்திலோ மைக்ரோவேவ் அவனை வைக்கக்கூடாது.

* மைக்ரோவேவ் அவனில் குறைந்த அளவில் சமையல் செய்யும் போது மின்சார உபயோகம் அதிக அளவில் மிச்சப்படுத்தப்படுகிறது என்பதை கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.

* சமைக்கப்பட்ட உணவை ஒரு தட்டில் பரிமாறி சூடேற்றும்போது, ஒரு நிமிடமோ 2 நிமிடமோ சூடேற்றினாலே போதும்!

* சமைக்கப்பட்ட கறிவகைகள் சூடு பண்ணும்போதும் மூடியை உபயோகிக்க வேண்டும். ஆனால் இடையில் மூடியைத் திறந்து ஓரிரு தடவைகள் கிளறிவிட்டால் பரவலாக உணவு சூடேறும்.

* சில சமயங்களில் ப்ரீசரிலிருந்து எடுக்கப்படுகின்ற Frozen காய்கறி பாக்கெட்டுகள் பச்சைப் பட்டாணி, சோளம் பாக்கெட்டுகள் போன்றவை நேரடியாக மைக்ரோவேவில் டீபிராஸ்ட் பண்ணப்படும்போது, அந்தப் பாக்கெட்டுகளில் சிறு துளைகள் இடவேண்டும். இப்படிச் செய்யாது போனால் பாக்கெட் வெடித்துக் காய்கள் சிதற வாய்ப்புண்டு.

* சிறிய கழுத்து உள்ள பாட்டில்களில் உணவுப் பதார்த்தமோ பான வகைகளோ சூடேற்றக் கூடாது. ஓரளவு அகன்ற வாயுள்ள பாட்டில்களை உபயோகிக்கலாம். ஆனால் தொடர்ந்து அதிக நேரம் பாட்டில்களை சூடேற்றுவது அவ்வளவு நல்லதல்ல. அவை வெடிப்பதற்கு வாய்ப்புண்டு.

* சிறு குழந்தைகளுக்கான உணவு வகைகள் சூடேற்றும்போது அந்தப் பாட்டில் அல்லது பாக்கெட்டில் தரப்பட்டிருக்கின்ற சூடேற்றம் விளக்கங்களைச் சரிவரப் படித்த பின்னர் அதன்படி செய்ய வேண்டும். சூடேற்றிய உடனேயே அதைக் குழந்தைக்குக் கொடுத்துவிடாமல் அதன் வெப்பநிலை சரியாக இருக்கிறதா எனக் கைவிரல் வைத்துப் பார்த்த பின்னர் தான் கொடுக்க வேண்டும். அது போலவே குழந்தைகளின் பால் பாட்டில்களை பாலோடு சூடேற்றிக் கொடுக்கும் போதும் ஒரு சில துளிகள் நமது கையில் ஊற்றிப் பார்த்த பின்னரே கொடுக்க வேண்டும்.

* பெரியவர்களும் கூட மைக்ரோவேவ் அவனில் சமைத்த அல்லது சூடேற்றிய உணவுப் பொருள்களை இறக்கியவுடன் எடுத்து வாயில் போடக் கூடாது. முன்னர் கூறியது போல சமையல் முடிந்து மணி அடித்த பின்னரும் சில செகண்டுகளுக்கோ அல்லது ஓரிரு நிமிடங்களுக்கோ தொடர்ந்து கதிர்களின் தாக்கம் அதில் இருக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அதன் பிறகுதான் பயன்படுத்த வேண்டும்.

கருத்துகள் இல்லை: